முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு : 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

0 5323

வருமானத்திற்கு அதிகமாக சுமார் 11 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு துறையினர் தமிழகம், தெலுங்கானா உட்பட 57 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், பதவியை முறைகேடாக பயன்படுத்தி, தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், தெலுங்கானா மாநிலத்திலும் அன்பழகன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி.அன்பழகனின் சொந்த மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது.

கேரகொடா அள்ளி பகுதியிலுள்ள கே.பி.அன்பழகன் வீடு, அவரது மகன்கள் சந்திரமோகன், சசிமோகன் ஆகியோரது வீடு, மகள் வித்யாவின் வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அன்பழகனுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் பாப்பிரெட்டிபட்டி அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி வீடு, கோவிந்தசாமியின் சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக நகரச் செயலாளர் பூக்கடை ரவி மற்றும் கே.பி.அன்பழகனின் சித்தப்பா வீடு, அரூர், பாலக்கோடு, மாரண்ட அள்ளி பகுதிகளில் செயல்பட்டு வரும் அன்பழகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்பழகன் வீட்டுக்கு முன் குவிந்த அதிமுகவினர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கே.பி.அன்பழகன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுதாக்கலில், நகைகள், நிலங்கள், முதலீடுகள் என கே.பி.அன்பழகனின் மொத்த சொத்து மதிப்பு ஒரு கோடியே 60லட்சம் ரூபாயாக இருந்ததாகவும், ஆனால், 2021 தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவின் படி சொத்து மதிப்பு 23கோடியே 3லட்சம் ரூபாயாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அன்பழகன் அமைச்சராக இருந்த ஐந்தாண்டு காலத்தில், அவரும், அவரது குடும்பத்தினரும் சம்பாதித்தாக கூறப்படும் வருமானம் 23கோடியே 59லட்சம் ரூபாய் என்ற நிலையில், இதில், 13கோடியே 32லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரவு, செலவு கணக்கு காட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, சேமிப்பு, செலவினங்கள் போக சுமார் 11கோடியே 32லட்சம் ரூபாய்க்கு கணக்கில் வராமல் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்கு, மருத்துவமனை, எண்டர்பிரைசஸ் நிறுவனம், கல்குவாரி, எம் சாண்ட் யூனிட், கல்வி அறக்கட்டளை என தனது உறவினர்கள், குடும்பத்தினர், நெருங்கியவர்கள் பெயரில் கே.பி.அன்பழகன் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு நெருக்கமானர் எனக் கூறப்படும் கனிமவளத்துறை அதிகாரி ஜெயபால் என்பவரது வீட்டில் சோதனை நடக்கிறது.

தற்போது கரூர் கனிம வளத்துறை அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துவரும் ஜெயபால், அன்பழகன் அமைச்சராக இருந்த போது தருமபுரியில் பணியாற்றியதோடு, அவர் கல்குவாரி துவங்க அனுமதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், சேலம் இரும்பாலை பகுதியிலுள்ள ஜெயபால் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments