முகக்கவசம் அணியாமல் வந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் : அபராதம் கேட்ட போலீசார் மீது தாக்குதல்
சென்னையில் முகக்கவசம் அணியாமல் வந்த மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஒருவர், தன்னை வீடியோ எடுத்த காவலரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எம்.ஜி.ஆர் நகர் போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை காசி தியேட்டர் சிக்னல் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் வந்த நபரை மடக்கி அபராதம் விதிக்க முயன்றனர். தன்னை கிண்டி சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவகிருஷ்ணன் எனக் கூறிய அந்த நபர், அபராதம் விதிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
"சுகாதாரத்துறை ஆய்வாளராக இருந்துக்கொண்டு நீங்களே முகக்கவசம் போடவில்லையே" என போலீசார் கேட்டபோது காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போதுதான் அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து சிவகிருஷ்ணன் தன்னை வீடியோ எடுக்க முயன்ற காவலரின் செல்போனை பிடுங்கி கீழே எறிந்து விட்டு அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
காவல் நிலையம் வருமாறு அழைத்தபோது, "காவல் ஆய்வாளர் யார், அவரை வரச் சொல்லுங்கள் பேசிக் கொள்கிறேன்" என அவர் அலப்பறை செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Comments