6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் 6 பேர் நீர்ச்சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் இடுவாய் அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் 3 வேன்களில் திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள மாம்பாறை முனியப்பன் கோவிலுக்கு சாமிகும்பிடச் சென்றுள்ளனர்.
வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வழியில் தாராபுரம் அமராவதி ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்த்ததும் உற்சாகமடைந்து, இளைஞர்கள் 10 பேர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆர்வ மிகுதியில் சற்று ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்களில் 6 பேர் நீர்ச் சுழலில் சிக்கி கூச்சலிட்டுள்ளனர். உடன் சென்றவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்று அது தோல்வியில் முடிந்த நிலையில், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி, 6 பேரின் சடலங்களையும் மீட்டனர். அவர்களைக் காப்பாற்ற முயன்று கை எலும்பை முறித்துக் கொண்ட நபரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகன்கள் ஸ்ரீதர், ரஞ்சித் ஆகியோரும் திருப்பதி என்பவரது மகன்களான யுவன், மோகன் ஆகியோரும் அடங்குவர். அத்தனை பேருமே 19 வயதைத் தாண்டாதவர்கள்.
தாராபுரம் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் உள்ள இந்தப் பகுதியில் சுமார் 20 அடி ஆழம் வரை மணல் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் ஆழம் அதிகமாகவும் கீழே மணல் இல்லாமல் சேறு சகதியுடன் புதைகுழியுமாகவும் உள்ளது. இதுகுறித்து அறியாத வெளியூர் நபர்கள் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று கரைக்கு திரும்பவர முடியாமல் நீரில் முழ்கி பலியாவது தொடர்கதையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஆழமான பகுதிக்குச் செல்பவர்கள் நீந்தமுடியாமல் நீரில் முழ்கும்போது சேறும் சகதியுமான புதைகுழியில் சிக்கிவிடுவதால், மீட்கச் செல்லும் தீயணைப்பு வீரர்களுக்கும் அச்சுறுத்தலாகிவிடுவதாகச் சொல்லப்படுகிறது.
இதே பகுதியில் மட்டும் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் குளிக்க சென்று இறந்துள்ளனர் என்று கூறப்படும் நிலையில், அங்கு எச்சரிக்கைப் பலகை வைப்பதோடு அதை மீறி சென்றுவிடாதவாறு தடையை ஏற்படுத்தவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments