அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதலமைச்சர் பெயரில் கார் பரிசு.!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடிய காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும், பிடிக்கப்படாத ஒரு காளைக்கு பிரதமர் மோடி சார்பில் தங்க காசும் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1020 காளைகள் பங்கேற்றன. 300 மாடுபிடி வீரர்கள் சுற்றுக்கு 50 பேர் வீதம் களமிறக்கப்பட்டனர். சில காளைகள் களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி நிலையில், அவற்றைப் பிடிக்க முடியாமல் வீரர்கள் பின்வாங்கினர்.ஆக்ரோசத்துடன் களமாடிய ஒரு காளை, யாரையும் நெருங்கவிடாமல், மிரட்டியது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்ற ஒரு காளை பிடிபட்டாலும் திரும்பி வந்த ஆவேசம் காட்டியது. வாடிவசலுக்குள் போவதும், களத்தில் நின்று அனைவரையும் தெறிக்கவிடுவதுமாய் இருந்த காளை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
வழக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய கரூர் வெள்ளைக் காளை, வாடிவாசலை விட்டு முதலில் வெளியேற மறுத்தாலும், பின்னர், பொறுமையாக வெளியில் வந்து நின்று களமாடி பரிசை வென்றது.இதே போல திருநங்கை கீர்த்தனாவின், ருத்ரன் காளை, ஒரு கண் பார்வையில்லாத நிலையிலும், தனது திறனை வழக்கம்போல் வெளிப்படுத்தி வெற்றி கண்டது.
அதே நேரத்தில் பல காளைகளின் திமில்களை பிடித்து வீரர்கள் மடக்கி பரிசுகளை வென்றனர். கூர் கொம்புகளுடன் களத்தில் இறங்கிய காளைகளை தீரத்துடன் அடக்கி, ஏறு தழுவதில் தமிழர்களே தலை சிறந்தவர்கள் என்பதை வீரர்கள் பலரும் நிரூபித்தனர்.
ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடி தேர்வு பெற்ற சிறந்த காளைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.இதே போல ஒரு காளைக்கு பிரதமர் மோடி சார்பில் தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.
மாடுகளை பிடித்த அனைத்து வீரர்களுக்கும் தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. இதே போல பிடிபடாத அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
இது தவிர களத்தில் இறக்கப்பட்ட அனைத்து காளைகளுக்கும் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. தங்க காசுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் வழங்கப்பட்டன. அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெற்றவருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.
Comments