தைப்பூச திருவிழா கோலாகலம்... அரோஹரா.... அரோஹரா.. பக்தர்கள் உற்சாக முழுக்கம்

0 2346

முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருவிழாவை ஒட்டி, தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் வாசலிலே நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

முருகப் பெருமானின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் கொரோனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், நுழைவுவாயில் நின்றபடியே பூஜை செய்து வழிபட்டனர். கோவிலில் அனைத்து கால பூஜைகளும் பக்தர்களின்றி நடைபெற்றது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் நுழைவாயில் முன்பு சூடம் ஏற்றி கோபுர தரிசனம் செய்தனர். மேலும் பைரவர் கோவில் கடற்கரை பகுதியில் பக்தர்கள் புனித நீராடி குழுவாக இணைந்து பக்தி பாடல்களை பாடி வேண்டிக் கொண்டனர்.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது. தைப்பூச தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பழனியில் காலை முதலே குவிந்த பக்தர்கள் கிரிவல வீதிகளில் காவடியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாதவிநாயகர் கோவிலில் வழிபட்டு அங்கிருந்தவாறே பழனி முருகனை தரிசனம் செய்து மனமுருக வேண்டிக் கொண்டனர். மேலும் கிரி வீதிகளில் சுற்றி வந்து அரோகரா கோஷமிட்டு, சூடம், தீபம் ஏற்றி வழிபட்டனர்.

முருகனின் 4-ம் படை வீடாக சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் விளங்குகிறது. கொரோனா காரணமாக சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவில் மூடப்பட்டிருந்த போதும், பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்திருந்த மக்கள், கோவில் வாசல் முன் தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டு, தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

திருத்தணி முருகன் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், சரவண பொய்கை குளம் அருகே படிக்கட்டுகளில் தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டு சென்றனர். சிலர் தடையை மீறி மேலே ஏறி கோபுர தரிசனம் செய்தனர். வழக்கமாக நடைபெறும் தங்கத்தேர், கேடய உற்சவம் ஆகியவை நடைபெறவில்லை. திருத்தணி முருகன் கோவில் முருகன் ஐந்தாம் படை வீடு ஆகும்.

இதுதவிர, தைப்பூச திருவிழாவை ஒட்டி, மருதமலை உள்ளிட்ட தமிழகம் முழுவதுமுள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments