ஊரடங்கு வசூல் ராஜாக்கள்... கதறும் ரெயில் பயணிகள்... 10 மடங்கு கூடுதல் கட்டணம்

0 13254

ரடங்கு என்பதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் OLA, Uber போன்ற வாடகை கார்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு இரவு நேர ஊரடங்கையும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையும் அமல்படுத்தி உள்ளது.

ரயில் சேவையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத காரணத்தால், வெளி மாவட்டங்களில் இருந்தும்,மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு இரவு நேரங்களிலும், ஞாயிற்று கிழமை காலையிலும் வந்து இறங்கிய பயணிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல போதிய வாகன வசதி இன்றி கடும் இன்னலுக்கு உள்ளாகினர்.

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளில் செல்ல இயலாமல் இரவு முதல் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிருத்தங்களிலும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.

ரெயில் மற்றும் பேருந்துகளில் சென்னைக்கு வருவோர் அந்த பயணச்சீட்டை போலீசாரிடம் காண்பித்து தடையின்றி பயணிக்கலாம் என்று மாநகர காவல்துறை அறிவித்துள்ள நிலையில், போலீசாரின் வாகன சோதனை கெடுபிடிகளை காரணம் காட்டியும், பேருந்து வசதி இல்லாமல் பயணிகளின் கையறு நிலையை பயன் படுத்தியும், மீட்டர் கட்டணத்தை மறந்த சில ஆட்டோ ஓட்டுனர்கள் மூன்று மடங்கு முதல் 10 மடங்கு வரை இரவு நேரங்களில் அடாவடியாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சைதாப்பேட்டையில் இருந்து தனது நண்பரை அழைத்துச் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ஒருவர் கூறும் போது பொதுவாக சைதாப்பேட்டை முதல் மத்திய ரயில் நிலையம் வரை பயணிப்பதற்கு ஆட்டோவில் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஆனால் ஞாயிறு ஊரடங்கு என்பதை காரணம் காட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் அதனை சாதகமாக பயன்படுத்தி மூன்று மடங்கு அதிகமாக 450 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக ஆதங்கம் தெரிவித்தார்

பயணி ராஜா கூறுகையில், தான் வண்ணாரப்பேட்டையில் இருந்து தனது குடும்பத்தினருடன் எழும்பூர் ரயில் நிலையம் வந்ததாகவும் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வண்ணாரப் பேட்டையில் இருந்து ரயில் நிலையம் வருவதற்கு 1500 ரூபாய் கட்டணத்தை ஆட்டோ ஓட்டுனர் வசூல் செய்ததாக தெரிவித்தார்.

OLA Cab-ல் பயணித்த பயணி சீனிவாசன் கூறுகையில், மதனந்தபுரத்தில் இருந்து முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை பயணிப்பதற்கு Ola செயலியில் பதிவு செய்யும் பொழுது 150 ரூபாய் கட்டணம் கேட்கப்பட்டதாகவும் சிறிது நேரம் கழித்து ஓட்டுநர் போன் செய்து 450 ரூபாய் கேட்டதாகவும் கூறினார் ஓட்டுனரிடம் செயலில் 150 தான் காட்டியது என்று கூறியதற்கு செயலில் காட்டும் இன்றி ஊரடங்கு ஆங்காங்கே போலீசார் சோதனையில் ஈடுபடுகின்றனர் சிரமத்தை தாண்டி பயணிக்க வேண்டியிருக்கிறது 450 ரூபாய் கொடுத்தால் தான் வருவேன் என்று கூறியதாகவும் கூறினார்.

ஆட்டோ ஓட்டுனர் கூடுதல் கட்டணம் கேட்டதால் பெண் பயணிகள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

தாம்பரத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வருவதற்கு வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு அதிகமாக கட்டணம் கொடுத்தால் மட்டுமே வருவதாக ஆட்டோ ஓட்டுனர் கறாராக கூறியிருக்கிறார்.

பயணிகளும் இரு மடங்கு கட்டணம் தருவதாக ஒப்புக்கொண்டு ஆட்டோவில் பயணித்து எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர். ரயில் நிலையம் வந்த பின்பு ஆட்டோ ஓட்டுனர் கேட்டபடி இரு மடங்கு கட்டணத்தை செலுத்திய பிறகு, அதுவும் போதாது என்று கூடுதலாக 20 ரூபாய் கேட்டு ஆட்டோ ஓட்டுனர் தகராறு செய்ததால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றியது

அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் வந்து இரு மடங்கிற்கும் அதிகமாக கட்டணம் கேட்கக் கூடாது என்று அறிவுறுத்தி சமாதானம் செய்து அந்த வசூல் ஆட்டோ ஓட்டுநரை அனுப்பி வைத்தார்.

சென்னைவரும் பயணிகள் தினம் சந்திக்கும் இன்னலாக மாறியுள்ள இந்த பகிரங்க கட்டண கொள்ளையை முறைப்படுத்துவதோடு பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களில் இருந்து நியாயமான கட்டணத்தில் எந்த தடையுமின்றி பயணிகள் தங்கள் வீட்டிற்கு செல்ல தக்க வகையில் வாடகை வாகனங்களை இயக்க ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments