தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமல்
தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நகரங்களில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையை போல் இன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் வழக்கம் போல் மக்கள் வழங்கப்படுகிறது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.
இன்று காணும் பொங்கல் என்பதால் கடற்கரை, பொழுது போக்கு பூங்காக்களில் மக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பொதுமக்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை, கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியூர்களில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த பயணிகள் பிற பகுதிகளுக்கு செல்ல வாகனங்கள் இன்றி தவித்தனர். கோயம்பேட்டில் இருந்து மாநகர மற்றும் வெளியூர் பேருந்துகள் இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டன.
ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மொத்த மற்றும் சில்லரை விற்பனை காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. வெளியூர்களில் இருந்து லாரிகளில் காய்கறி வரத்து இல்லாததால் மார்க்கெட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
Comments