பொங்கலோ....பொங்கல்... தமிழர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து உற்சாக கொண்டாட்டம்!
தமிழர் திருநாளாம் தை திருநாளைஒட்டி, தமிழர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து படையிலிட்டு வழிபாடு நடத்தினர்.
தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி சொல்லும் வகையில் தை முதல்நாளான இன்றைய தினம் காலையிலேயே வீட்டு வாசலில் அழகாய் வண்ண நிறங்களில் கோலமிட்டு, தோரணங்கள் கட்டி அலங்கரித்தனர்.
புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் புதுப்பானையில் மஞ்சள், இஞ்சி கொத்து கட்டி அலங்கரித்து பொங்கல் வைத்து சூரியக்கடவுளுக்குப் படையலிட்டு நன்றி கூறி வழிபட்டனர். மதம், இன பேதமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகளைப் பரிமாறி மகிழ்ந்தனர்.
காஞ்சிபுரத்தில் விவசாயி ஒருவர் அறுவடை திருநாளில் மாடுகளின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஒன்றரை டன் கரும்பால் வடிவமைக்கப்பட்டிருந்த இரண்டு காளை மாடுகளை வைத்து பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
நெல்லை மாவட்டத்தில் மக்கள் காலையிலேயே எழுந்து, புத்தாடை அணிந்து புது அரிசியில் சூரியபகவானுக்கு பொங்கலிட்டனர். தங்களது நிலத்தில் விளைந்த காய்கறிகள், கிழங்கு வகைகளை படையிலிட்டு வழிபாடு நடத்தினர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நெல் செல்வம் என்ற விவசாயி, பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெல் நாற்றுகளை கொண்டு வரைந்திருந்த ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாற்றுகளை வைத்தே, உயிரெழுத்துக்கள், பொங்கல் பானை, கரும்பு ஆகியவற்றை தனது விவசாய நிலத்தில் வடிவமைத்திருந்தார்.
சேலத்தில் காவலர்கள் ஒன்றாக சேர்ந்து பாரம்பரிய உடையணிந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவில் உரியடி, கயிறு இழுப்பது, மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா பரிசு வழங்கினார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு முதியோர் காப்பகத்தில் வசிக்கும் முதியோர்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடி, ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வேங்குராயன்குடிக்காடு என்ற கிராமத்தில் அனைத்து மக்களும் வீட்டு வாசலில் மண் பானையில் பொங்கல் வைத்து குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
குமரி மாவட்டம் வளனூர் தூய சூசையப்பர் தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு, புத்தம் புதிய மண் பானையில் பொங்கல் வைத்து நடனமாடி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் புதுப்பானையில் பொங்கல் வைத்து உற்சாகமாக குலவையிட்டு கொண்டாடினர். கொரோனா காரணமாக கோவில்கள் மூடப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே சுவாமி தரிசனம் செய்தனர்.
Comments