தமிழகத்தில் போகிப் பண்டிகை கோலாகலம்... பழையன கழிதலும்... புதியன புகுதலும்... பயனற்ற பொருட்கள் தீயிட்டு எரிப்பு....
தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகையை விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் இருந்த பயனற்ற பொருட்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால், அதிகாலையில் பல இடங்களில் புகைமூட்டமாகக் காணப்பட்டது.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் அதிகாலையிலே எழுந்து தேவையற்ற பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கடம்பத்தூர், ஊத்துக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள் கைகளில் மேளத்தை அடித்தபடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய பொருட்களை தீ வைத்து எரித்ததில் வெளியேறிய கரும் புகையால் சென்னை கோயம்பேடு, மெரினா உள்ளிட்ட பகுதிகள் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
திருவள்ளூரில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்ததால் ரயில் நிலையம், முக்கியச் சாலைகளில் புகைமூட்டம் சூழ்ந்தது.
காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் அதிகாலையில் போகிப் பண்டிகை களைகட்டியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடுபனி சூழ்ந்து, எதிரே வரும் வாகனங்கள் கண்களுக்கு புலப்படாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் போகி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், சாலை முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. கடலூர் அண்ணா பாலத்தில் இருந்து கெடிலம் ஆறு தெரியாத அளவுக்கு புகை மூட்டமாக காணப்பட்ட நிலையில், அதன் கழுகு பார்வை காட்சிகளை காணலாம்..
Comments