ஒலியின் வேகத்தில் ஒரு ஏவுகணை.. இந்தியாவின் புதிய சாதனை..!

0 4403

கப்பலில் இருந்து கப்பலை தாக்கும் அதி நவீன பிரமோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.

இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாட்டின் மேற்கு கடற்பரப்பில் பிரமோஸ் ஏவுகணை சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. நாட்டின் அதி நவீன நாசகாரி கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கில் நிறுத்தப்பட்டிருந்த பழைய கப்பல் ஒன்றை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தில் பாய்ந்து சென்ற பிரமோஸ் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புத்துறை பிரமோஸ் ஏவுகணையை முப்படையினரும் பிரயோகிக்கும் வகையில் உருவாக்கி உள்ளது. ஏற்கனவே ராணுவம் மற்றும் விமானப்படையினர் பிரமோஸ் ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளனர். இதே போன்று நீரடியில் ஏவி எதிரிகளின் இலக்கை தூளாக்கும் நீரடி பிரமோஸ் ஏவுகணையும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சோதனையில் கப்பலில் இருந்து கப்பலை தாக்கும் வகையிலான பிரமோஸ் ஏவுகணையும் வெற்றிகரமாக செயல்பட்டு உள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 

முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பிரமோஸ் ஏவுகணை 3000 கிலோ எடையும்,28 அடி நீளமும் கொண்டது. 2 அடி விட்டம் கொண்ட ஏவுகணையில் 200 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு அல்லது அணுகுண்டை வைத்து ஏவ முடியும். ஏவி பின்னரும் எதிரி இலக்கின் இருப்பிடத்திற்கு ஏற்ப திசையைமாற்றும் தொழில் நுட்பமும் இந்த ஏவுகணையின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். குறைந்த பட்சமாக 10 மீட்டர் உயரமும் அதிக பட்சமாக 15 கிலோ மீட்டர் உயரம் வரையிலும் செல்லும் இந்த ஏவுகணை 800 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எதிரிகளின் இலக்கையும் மிக துல்லியமாக அழிக்கும் வல்லமை கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments