காதலித்து ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர் - விஷமருந்திய நிலையில் வாக்குமூல வீடியோ வெளியிட்ட இளம்பெண்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆட்டோ ஓட்டுநரால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் வாக்குமூல வீடியோ வைரலாகி வருகிறது.
ஐந்தாம்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்ற பெண்ணும் சதீஷ் என்பவனும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்ததுடன் தனிமையிலும் சந்தித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் உறவினருக்கும் ஊர்மக்களுக்கும் தெரியவந்த நிலையில், செல்வமணியை சதீஷ் புறக்கணிக்க முயன்றுள்ளான்.
இதனையடுத்து தாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்த ஆதாரங்களோடு காவல்துறையில் புகாரளிக்கச் சென்றதாகவும் ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர் என்றும் கூறும் செல்வமணி, தனக்கு நியாயம் கேட்டு சதீஷ் வீட்டுக்கு நேரடியாகச் சென்றுள்ளார்.
அங்கு சதீஷின் உறவினர்கள் அவரை தாக்கி துரத்தினர் என்று கூறப்படும் நிலையில், வீட்டு முன்பு செல்வமணி தர்ணாவில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தனக்கு நியாயம் கிடைக்காது என்று எண்ணி, விஷம் அருந்திய செல்வமணி, தனது வாக்குமூலத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ வெளியான பின்பே போலீசார் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர் என்று கூறப்படும் நிலையில், செல்வமணிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments