சென்னையில் முழு ஊரடங்கு: தீவிர வாகனத் தணிக்கை

0 2838

முழு ஊரடங்கையொட்டிச் சென்னை மாநகரின் முதன்மையான சாலைகளிலும், சாலைச் சந்திப்புகளிலும் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் மருந்தகங்கள், பாலகங்கள் தவிர அனைத்துச் சந்தைகளும் கடைகளும் மூடப்பட்டுள்ளன. உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

ஆன்லைன் உணவு வழங்கல் சேவை அனுமதிக்கப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனங்களில் பணியாளர்கள் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

சென்னை அண்ணாசாலை, காமராஜர் சாலை, பெரியார் சாலை ஆகியன வாகனப் போக்குவரத்து இன்றிக் காணப்பட்டன.

சாலைச் சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டனர். இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோரின் வாகனங்களை மட்டும் அடையாள அட்டைகளைச் சரிபார்த்த பின் அனுமதித்தனர்.

தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தோரை எச்சரித்து அனுப்பினர். அண்ணா சாலையில் வாகனத் தணிக்கை முறையாக நடைபெறுகிறதா எனக் காவல் உயர் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் வேளச்சேரி சாலைகள் இன்று வாகனப் போக்குவரத்தின்றிக் காணப்பட்டன.

சோழிங்கநல்லூரில் முழு ஊரடங்கையொட்டிச் சாலையில் வாகனப் போக்குவரத்து இல்லை. இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோரின் ஒருசில வாகனங்கள் மட்டுமே இயங்கின.

சென்னை பெரியார் நெடுஞ்சாலையும் வாகனப் போக்குவரத்து இன்றிக் காணப்பட்டது.

எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னுள்ள சாலையும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments