மும்பை எக்ஸ்பிரஸில் மோசடி குடிநீர் பாட்டில்... இந்தியில் தெறிக்கவிட்ட தமிழன்..! தமிழக பயணின்னா இளக்காரமா ?

0 31787
மும்பை எக்ஸ்பிரஸில் மோசடி குடிநீர் பாட்டில்... இந்தியில் தெறிக்கவிட்ட தமிழன்..! தமிழக பயணின்னா இளக்காரமா ?

மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலி தண்ணீர் பாட்டில்களை விற்ற ரெயில்வே ஒப்பந்ததாரரை கையும் களவுமாக பிடித்த பயணிகள் அரக்கோணத்தில் ரெயிலை  நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தெரியாது என்று சமாளித்தவர்களை இந்தியில் பேசி போலீசில் சிக்கவைத்த தமிழக இளைஞரின் சாமர்த்திய  நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. 

தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளுக்கு, ரெயில் நீர் என்ற குடிநீர் பாட்டில் வழங்கப்படுகின்றது. அதே போல் மும்பையில் இருந்து தமிழகத்தின் நாகர்கோவிலுக்கு வரும் மும்பை எக்ஸ்பிரசில், தமிழகம் வரை ரெயில் நீர் வழங்கும் ரெயில்வே உணவக ஊழியர்கள், தமிழக எல்லைக்குள் வந்த பின்னர் ஹெல்த் பிளஸ் என்ற பெயரில் சீல் வைக்கப்படாமல், காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீர் பாட்டிலை விநியோகிப்பதை வாடிக்கையாக செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

அந்த வகையில் கோவில்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளரான கணேஷ் என்பவர் முப்பையில் இருந்து சனிக்கிழமை சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். அவர் ரெயிலில் வாங்கிய ஹெல்த் பிளஸ் தண்ணீர் பாட்டிலில் சீல் இல்லாத நிலையில் அதனை குடித்து பார்த்த போது அது மினரல் வாட்டரே இல்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த குடிநீரில் பிளீச்சிங் பவுடர் வாடை வீசியதால் கொரோனா பரவி வரும் சூழலில் இந்த தரமற்ற நீரை குடிக்க வேண்டாம் என்று சக பயணிகளிடம் அறிவுறுத்தியதோடு டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த நீரை குடித்து பார்த்த, டிடிஆரும் அதில் அடைக்கப்பட்டிருப்பது தரமற்ற குடி நீர் என்பதை ஒப்புக் கொண்டார். சாதாரண வாட்டர் பாட்டிலில் தரமற்ற குடிநீரை பிடித்து வைத்து ஹெல்த் பிளஸ் என்ற ஸ்டிக்கருடன் தமிழகத்துக்குள் பயணிக்கும் பயணிகளிடம் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது

தமிழக பயணிகளிடம் தரமற்ற குடி நீரை அதிக விலைக்கு விற்ற உணவக ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இந்தியில் பேசினார்

இதையடுத்து தாங்கள் விற்ற குடிநீர் பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக உணவக ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து ஒவ்வொரு பணிகளிடமும் இருந்தும் தரமற்ற குடிநீர் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டன

இதற்கிடையே அந்த உணவகத்தில் சோதனை நடத்திய போது உள்ளே அட்டை பெட்டிகளில் சுமார் 300 ரெயில் நீர் குடிநீர் பாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த கணேஷ் உள்ளிட்ட பயணிகள், உணவக ஒப்பந்ததாரர்கள் செய்த தில்லு முல்லு வேலையை, அங்குள்ள அதிகாரிகளுக்கு புரிந்த இந்தியில் பேசி அம்பலப்படுத்தினர்

இதையடுத்து அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயிலை விட்டு இறங்கிய பயணிகள் சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர்

இதையடுத்து ரெயில்வே போலீசார் உணவக ஒப்பந்ததாரரை ரெயிலை விட்டு இறக்கி விசாரணைக்காக கையோடு கூட்டிச்சென்றனர். குடிநீர் தேவைப்படுவோருக்கு தரமான ரெயில் நீர் குடிநீர் பாட்டில் நியாயமான விலைக்கு வழங்கப்பட்டதை அடுத்து அங்கிருந்து ரெயில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டது.

தமிழக பகுதிக்குள் தரமற்ற குடி நீரை விற்று விட்டு , தமிழ் தெரியாது என்று கூறி தப்பிக்க நினைத்த வட மாநில ஒப்பந்த ஊழியர்களுக்கு, தமிழர்களுக்கு இந்தியும் தெரியும் என்று பதிலடி கொடுத்து போலீசில் சிக்கவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments