5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா..

0 6217

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் இரு கட்டங்களாகவும், ஏனைய மூன்று மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்பட உள்ளதால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவித்தார். ஆயிரத்து 250 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற விகிதத்தில் வாக்குச்சாவடிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கடந்த தேர்தல்களை விட தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தரைத்தளத்திலேயே அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்த சுஷில் சந்திரா, குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால், எதன் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 15ஆம் தேதி வரை தேர்தல் பிரசாரக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்படுவதாகவும், இணைய வழியில் வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பிறகு வெற்றி விழா கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து 5 மாநில சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் இரு கட்டங்களாகவும், பஞ்சாப், உத்தராகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3, 7 ஆகிய தேர்திகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27, மார்ச் 3 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாப், உத்ரகாண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 5 மாநிலங்களிலும் மார்ச் மாதம் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள உத்தர பிரதேசத்தில் வரும் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும், 24ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments