இமாலய வேகத்தில் கொரோனா தொற்றுப் பரவி வருகிறது - அமைச்சர்
இமாலய வேகத்தில் கொரோனா தொற்றுப் பரவி வருவதாகத் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜனவரி நான்காம் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு இந்திரா நகரில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மொத்தம் 8 கோடியே 83 இலட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 5 நாட்களில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்கள் 21 இலட்சத்து 52 ஆயிரத்து 755 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஜனவரி 10ஆம் நாள் சென்னை பட்டினப்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
இமாலய வேகத்தில் கொரோனா தொற்றுப் பரவி வருவதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.
Comments