சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலுரை.!

0 1852

தமிழ்நாட்டில், அம்மா உணவகங்கள் மூடப்படாது என்றும், ஜெயலலிதா நினைவிடத்தை பொதுப்பணித்துறை தொடர்ந்து பராமரிக்கும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்த அதிமுகவுக்கு நன்றி, என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கி சுமார் 48 நிமிடங்கள் பேசினார். முதலமைச்சர் தனது உரையில், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பால் விலை குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டு பேசினார்.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணம் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள், கடந்த ஆட்சியில் முடக்கப்பட்டதாக சில திட்டங்களை பட்டியலிட்டு விமர்சித்த முதலமைச்சர், தமிழகத்தில் அம்மா உணவகங்கள் ஒருபோதும் மூடப்படாது என்றும் உறுதி அளித்தார்.

மேலும், ஜெயலலிதா நினைவிடம் தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும், அதை பொதுப்பணித்துறை தொடர்ந்து பராமரிக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான தமிழக அரசு துரிதமாக செயல்படுவதாக பாராட்டியதற்கும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்போம் என அறிவித்ததற்கும் அதிமுகவுக்கு நன்றி, என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாட்டத்தை போக்கும் வகையில் நூல் விலையை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments