தமிழ் தெரியாத விமான பணிப்பெண்ணை தமிழில் பேசச் சொல்லி டார்ச்சர்.. அறிவிப்பு புரியவில்லை என்று அட்ராசிட்டி..!
விமானத்தில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பயணி ஒருவர், பயணிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்த அறிவிப்பை ஏன் தமிழில் அறிவிக்க வில்லை எனக்கேட்டு தமிழ் தெரியாத விமானப்பணிப்பெண்ணை தமிழில் பேசச்சொல்லி பயணி ஒருவர் அடம் பிடித்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகின்றது..
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் விமானப் பணிபெண்ணாக வரும் நாயகியிடம் காமெடி நடிகர் சந்தானம் எழுப்பும் கேள்விகளால் அவர் விழிபிதுங்கி போவார் அதே போன்ற நிஜ சம்பவம் ஒன்று தமிழ் பயணியால் நிகழ்ந்துள்ளது.
நம் நாட்டை பொறுத்தவரை உள் நாட்டுக்குள் இயக்கப்படும் விமானம் புறப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு தொடர்பான முன் எச்சரிக்கை அறிவிப்பு, அதாவது விமானம் விபத்தில் சிக்க நேர்ந்தால் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த செயல் முறை விளக்கம் விமானப்பணிப்பெண்ணால் ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.
ஒருவேளை அந்த விமானத்தில் குறிப்பிட்ட மாநில மொழியை சேர்ந்த மக்கள் அதிக அளவில் பயணித்தாலோ, விமான பணிப்பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட மாநில மொழி தெரிந்தால் அந்த மாநில மொழியிலும் சில நேரங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தெரிவிக்கப்படும். இந்த நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த தமிழ் மட்டுமே தெரிந்த பயணி ஒருவர், தமிழே தெரியாத விமான பணிப்பெண்ணிடம் , பாதுகாப்பு முன் எச்சரிக்கை அறிவிப்பை தமிழில் தெரிவிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடம் பிடித்த நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.
ஏற்கனவே ஒரு விமான பணிப்பெண் ஆங்கிலம், இந்தி இரண்டில் மட்டும் தான் அறிவிக்க முடியும் என்று சண்டையிட்டு சென்றதால் ஆத்திரத்தில் இருந்த அந்த தமிழ் பயணி, மூத்த விமான பணிபெண்ணிடம் , தனக்கு தமிழை தவிர வேறு மொழிகள் தெரியாது என்றும் பிபின்ராவத் என்பதை தவறாக பிரனாவத் சென்ற ஹெலிகாப்டரே விபத்தில் சிக்குகிறது எனவே சேப்டி பர்பஸ் குறித்து தமிழில் சொல்லுங்கள் என்று அடம்பிடிக்க தொடங்கினார்.
தமிழ் தெரியாத அந்த விமானப் பணிப்பெண்ணோ மிகவும் கனிவுடன் தான் இது தொடர்பான தங்கள் கருத்தை குறித்து வைத்துக் கொண்டு நிவர்த்தி செய்ய முயல்வதாகவும், விமானம் புறப்பட தயாராக இருப்பதால் சீட்பெல்ட்டை அணியுங்கள் என்றும் ஆங்கிலத்தில் தெரிவித்தார்.
அந்த தமிழ் பயணியோ சீட் பெல்ட்டை அருகில் இருந்தவரை பார்த்து தான் போட்டுக் கொண்டதாகவும், லைப்ஜாக்கெட் என்று சொல்கிறீர்களே அதை நான் எப்படி யூஸ் பன்றது ? என்பதை தமிழில் சொல்லுங்கள் என்றும் கீழே குதிக்கும் போது உங்களை கூப்பிட்டு கேட்க முடியுமா ? என்றும் கேட்டு அதிரவைத்தார்
விமானத்தில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்பதற்காக நடந்த வாக்குவாதமாக இருந்தாலும், தமிழுக்காக குரல் கொடுத்த அந்த பயணி பயன்படுத்திய பெரும்பாலான சொற்களில் ஆங்கிலம் கலந்தே இருந்தது.
தமிழ் தெரியாத விமானப்பணிப்பெண் என்று தெரிந்தே அவர் அடம்பிடித்த இந்த நிகழ்வு எபோது எங்கு நடந்தது என்ற தகவல் வெளியாகாத நிலையில், அந்த பயணியே செல்போனில் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் விட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Comments