வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் 7 நாட்கள் வீட்டுத்தனிமை கட்டாயம் ; மத்திய அரசு
உலக அளவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் இனி 7 நாட்கள் வீட்டுத் தனிமை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா வருவோர் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும், 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிமை காலம் முடிந்ததும் கொரோனா பரிசோதனைக்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போது கொரோனா உறுதியானால், அவர்களது மாதிரிகள் கட்டாயம் மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக அபாய நாடுகளில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், தற்போது அனைவருக்கும் கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Comments