லாரிகளை மறித்துப் போட்டு போலீசுக்கு வசூல் டியூட்டி பார்த்த மங்கி குல்லா ஆசாமி..!

0 4340
லாரிகளை மறித்துப் போட்டு போலீசுக்கு வசூல் டியூட்டி பார்த்த மங்கி குல்லா ஆசாமி..!

சென்னை மணலி விரைவுச்சாலையில், கண்டெய்னர் லாரிகளை மறித்து சாலையில் நிற்கவைத்து வசூலில் இறங்கிய போலிக் காவலர்கள் கையும் களவுமாக வீடியோவில் சிக்கினர். அசல் போலீசின் தொப்பியுடன், நள்ளிரவில் டியூட்டி பார்த்த மங்கிகுல்லா மர்ம ஆசாமிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னையில் மணலி விரைவு சாலையில் துறைமுகம் செல்லும் லாரிகளை பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையாக காத்திருக்க வைத்து விரைவாக செல்லும் அனுமதிக்காக லாரிகளிடம் போக்குவரத்து போலீசார் மாமூல் வசூலிப்பது காலங்காலமாக நடந்து வருகின்றது.

இது போன்ற மாமூல் வசூல் நடவடிக்கையில் ஈடுபட்ட 3 காவலர்கள் அண்மையில் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதையடுத்து லாரி ஓட்டுனர்களிடம் மாமூல் வசூலிக்கும் பணிக்காக உள்ளூரை சேர்ந்த சில இடைத்தரகர்களை காவல்துறையினர் பயன்படுத்தி வருவதாக கூறபடுகின்றது. அந்தவகையில் 5ந்தேதி நள்ளிரவு சென்னை மணலி விரைவுசாலையில் லிப்ட் கேட் பாலம் தாண்டி துறைமுக சாலையையின் சந்திப்பு பகுதியில் துறைமுகம் செல்லும் லாரிகளை முறையாக செல்லவிடாமல் தடுத்து போட்டதால் துறைமுக சாலை காலியாக காணப்பட்டது.

அங்குள்ள போக்குவரத்து போலீஸ் பூத் அருகே பிளாஸ்டிக் சேரில் கையில் காவலர் தொப்பி மற்றும் காவலர்களுக்கு உரிய சிக்னல் லைட்டுடன் அமர்ந்திருந்த மங்கி குல்லா அணிந்த மற்றொரு நபர், ஓட்டுனர்களை வரவழைத்து பணம் வாங்கிக் கொண்டிருந்தார், அவரிடம் துறைமுக சாலை காலியாக உள்ளது, ஒரு சில ஓட்டுனர்கள் சாலையின் குறுக்கே லாரிகளைப் போட்டு தூங்குவதால், ஒட்டு மொத்த ஓட்டுனர்களும் காத்திருப்பதாகவும் அதனை சரி செய்யுமாறும் புகார் கூறியதும், அவர் உடனடியாக கையில் இருந்த தொப்பி மற்றும் லைட்டை கீழே வைத்து விட்டு சாலையில் சென்று போக்குவரத்தை சரி செய்வது போல நடிக்க தொடங்கினார்.

அடுத்ததாக அங்கு ஜெர்க்கின் அணிந்த ஆசாமி ஒருவனும், டி சர்டுடன் அரைக்கால் சட்டை சணிந்த ஆசாமியும் அங்கு வந்து, தாங்கள் இரவு பணி பார்ப்பதாக கூறிய நிலையில், அவர்களின் நடவடிக்கையிலும் சந்தேகம் கொண்டு போலீஸ் உடை எங்கே என்றதும் தங்களை லாரி உரிமையாளர்கள் என்று கூறி சமாளித்தனர். எந்த லாரிக்கு உரிமையாளர் என்றதும் தங்களை பப்ளிக் என்று கூறி நழுவினர்.

பின்னர் தாங்கள் மாமூல் வசூலித்த லாரிகளை, ஒவ்வொன்றாக விதியை மீறி மற்ற வாகனங்கள் செல்லும் சாலை வழியாக விரைவாக செல்ல சாலையில் நின்று வழி ஏற்படுத்திக் கொடுத்தார் அந்த மங்கி குல்லா ஆசாமி.

நள்ளிரவு 2 மணி அளவில் போலீசாரின் தொப்பி மற்றும் லைட்டுடன் வசூல் டியூட்டி பார்த்த அந்த 3 பேரும் அங்கு பணியில் இருக்க வேண்டிய போலீஸ்காரருக்கு மாமூல் வசூலித்து கொடுக்கும் இடைத்தரகர்கள் என்பது பின்னர் விசாரித்த போது தெரிய வந்தது. அங்கு பணியில் இருக்க வேண்டிய போக்குவரத்து போலீஸ் தொப்பியையும், லைட்டையும் இவர்களிடம் கொடுத்து விட்டு எங்கே போனார்? என்பது தெரியவில்லை.

ஏற்கனவே இந்த பகுதி சென்னை பெரு நகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த போதும் , மாமூல் வேலையை இரவு பகலாக செய்து வந்த போக்குவரத்து வசூல் போலீசார், தற்போது இந்த பகுதி ஆவடி மாநகர காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட நாளில் இருந்து ஏதாவது காரணங்களை கூறி லாரிகளை சாலையில் மடக்கிப்போடுவதை முழுநேர வேலையாகவே செய்து வருகின்றனர்.

இத்தகைய வசூல் போலீசாரை,ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும் என்பதே, 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுகத்தை அடைய நாட்கணக்கில் காத்திருக்கும் லாரி ஓட்டுனர்கள் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments