யூடியூப்பில் வீடியோ போட்டு கட்டபஞ்சாயத்து செய்த ரவுடி போந்தூர் சிவா கைது..!

0 5698
யூடியூப்பில் வீடியோ போட்டு கட்டபஞ்சாயத்து செய்த ரவுடி போந்தூர் சிவா கைது..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை அடித்து உதைத்து கட்டபஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வரும் ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகளில் ஒருவனான போந்தூர் சிவா என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரே நாளில் 25 க்கும் மேற்பட்ட குட்டி ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

வெள்ளையும் சுள்ளையுமாக கூட்டாளிகளுடன் வீதி வீதியாக வலம் வந்து கெத்துக் காட்டுவதற்காக யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு தற்போது மாமூல் வழக்கில் போலீசாரிடம் சிக்கி உள்ள ரவுடி போந்தூர் சிவா இவர் தான்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் புகுந்து மிரட்டி இரும்புகழிவுகளை எடுத்து விற்பதை வாடிக்கையாக செய்து வந்த படப்பை குணாவுக்கு போந்தூரை சேர்ந்த சகோதரர்களான சேட்டு மற்றும் சிவா ஆகியோர் வலது இடது கரங்களாக இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இவர்கள் மாஸ்டர் படத்தில் நடித்ததால் பிரபலமான பூவையார் என்ற சிறுவனை அழைத்து வந்து குணாவை புகழ்ந்து கானா கச்சேரி எல்லாம் நடத்தி உள்ளனர்.

மதுரமங்கலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை அடித்து உதைத்து அவருக்கு சொந்தமான நிலப்பத்திரத்தை பறித்துச்சென்ற வழக்கில் ரவுடி படப்பை குணாவுடன் சேர்ந்து போந்தூர் சேட்டு, சிவா உள்ளிட்ட கும்பலை போலீசார் தேடிவந்த நிலையில், இரும்புக்கடை ஒன்றில் மாத மாமூலாக 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதோடு, உரிமையாளரை மிரட்டி 20 ஆயிரம் ரூபாயை பறித்துச்சென்ற வழக்கில் போந்தூர் எஸ்.பி.சிவாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்

அதுமட்டுமல்லாமல் குணாவுடன் சேர்ந்து மாமூல் வசூலிப்பது, அடிதடிகளில் ஈடுபடுவது என அட்ராசிட்டிகளில் ஈடுபட்டு வந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட குட்டி சேட்டை ரவுடிகளை பல்வேறு வழக்குகளின் கீழ் போலீசார் ஒரே நாளில் கைது செய்துள்ளனர். கடத்தல் மற்றும் இரும்புகழிவுகளை ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தி வந்த 8 கனரக வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

ஒரு பக்கம் படப்பை குணாவின் கூட்டாளிகளையும் ஸ்கெட்ச் போட்டு ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை டீம் தூக்கி வரும் நிலையில் மறு பக்கம் காஞ்சிபுரம் நகரப்பகுதிகளில் பட்டு ஜவுளிக்கடைகளை மிரட்டி லட்சக்கணக்கில் மாமூல் வசூலித்து வரும் கும்பலையும் போலீசார் தங்கள் தேடுதல் வேட்டையில் இணைத்துள்ளனர். போலீசுக்கு பயந்து கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீதர்தனபாலின் கையாட்களான தினேஷ், தியாகு, தணிகா ஆகியோர் தனிதனிகுழுவாக செயல்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 9 கொலை சம்பவங்களை நிகழ்த்தி உள்ளனர்.

தொடர்ந்து பட்டு ஜவுளி வியாபார நிறுவனங்களுக்கும் பெரும் அச்சுருத்தலாக மாறியுள்ளனர். இந்த 3 பேருடைய கும்பலுக்கும் மாதந்தோறும் பெருந்தொகையை மாமூலாக வழங்கப்பட்டு வருவது தெரியவந்ததையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் உரிமையாளர்களிடம் மாமூல் கொடுத்து ரவுடிகளை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ள போலீசார் அப்படி மாமூல் கேட்டு வரும் நபர்கள் குறித்து போலீசுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

ரவுடிகள் ஒழிப்பு சிறப்பு அதிகாரி வெள்ளதுரை குழுவினர் தனியாகவும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல் நிலையங்கள் மூலம் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள நிலையில் உதார் ரவுடிகள் மீது அடுத்தடுத்து கடுமையான நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments