ஆன்லைன் சூதாட்டத்திற்கு வருகிறது முற்றுப்புள்ளி...

0 3588
ஆன்லைன் சூதாட்டத்திற்கு வருகிறது முற்றுப்புள்ளி...

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவிலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது குறித்த தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அறிவித்தார். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக குறிப்பிட்ட முதலமைச்சர், அத்தீர்ப்பிற்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 இதனை அடுத்து உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த முதலமைச்சர், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது குறித்த தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார். இது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்

 சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், மெட்ரோ ரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

 மேலும், அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது பழிவாங்கும் நோக்கத்திற்காக அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.சட்டப்பேரவையில் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, அம்மா கிளினிக் எவ்வித கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் செயல்பட்டு வந்ததாக அவர் பதிலளித்தார். 

 சென்னை தியாகராயர் நகரில் விதிகளை மீறி ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அது தொடர்பாக விசாரணைக் குழு விரைவில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தும் போது விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments