முன்னாள் அமைச்சர் இராஜேந்திரபாலாஜி கைது.. கர்நாடகாவுக்கு சென்று பிடித்தது காவல்துறை.!
ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி, கர்நாடகாவில் வைத்து தமிழக தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை தப்பிக்க வைத்து, அடைக்கலம் கொடுத்தாக பாஜக மற்றும் அதிமுக பிரமுகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாயை மோசடி செய்ததார் எனப் புகார் எழுந்தது.இந்த வழக்கில் போலீஸார் தன்னைக் கைதுசெய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய போலீஸார் தீவிரமாகக் களமிறங்கினர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியிலுள்ள லாட்ஜ் ஒன்றில் இராஜேந்திர பாலாஜி கடந்த 4 நாட்களாக தங்கி இருக்கிறார் என்ற தகவல் தனிப்படை போலீசாருக்குக் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவரை கைது செய்ய ஹாசன் மாவட்ட போலீசாரின் உதவியை நாடினர். போலீசார் தன்னை நெருங்கிவிட்டதை அறிந்து இராஜேந்திர பாலாஜி அங்கிருந்து பெங்களூரு தப்ப முயன்றார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஹாசன் போலீசார் உதவியுடன் அவரது காரை விரட்டிச் சென்ற தனிப்படை போலீசார், இராஜேந்திர பாலாஜியை கைது செய்து தங்களது வாகனத்தில் ஏற்றினர்.
தொடர்ந்து தமிழக - கர்நாடக எல்லையான அத்திபள்ளி அருகே விருதுநகர் போலீசார் வந்த காவல் வாகனத்துக்கு இராஜேந்திர பாலாஜி மாற்றப்பட்டார். இராஜேந்திர பாலாஜி தப்பிச் செல்லவும் தலைமறைவாக இருக்கவும் உதவி செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் அவரது உறவினர் நாகேஷ், ஓசூரை சேர்ந்த ரமேஷ் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Comments