ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.
சட்டசபை கூட்டத் தொடரை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்படுகிறது.
அங்குள்ள 3-வது மாடியில் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார். இதில் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களுடன் புதிய அறிவிப்புகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநரின் ஆங்கில உரையை சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்தபின் நிகழ்ச்சிகள் இன்றைய நிறைவுபெறும். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அறையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்படும்.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, குறைந்த நாட்களே கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments