செத்தாலும் கடனை கட்டிட்டு செத்துப்போங்க.. தொடரும் ரிலையன்ஸ் வசூல் அடாவடி...! இந்தியன் வங்கிக்கு இவிங்க தண்டல்காரராம்..!
விழுப்புரம் அருகே இந்தியன் வங்கியில் விவசாய கடன் பெற்று 8 ஆண்டுகளாக திருப்பிச்செலுத்தாத விவசாயியிடம், வசூலிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள ரிலையன்ஸ் நிறுவன பெண் ஊழியர் வாய்க்கொழுப்புடன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...
விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரகோத்தமன். இவர், திருவெண்ணெய் நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் விவசாய கடன் பெற்றுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக விவசாயி ரகோத்தமன் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இந்தியன் வங்கியில் கடன் பெற்று விட்டு நீண்டகாலமாக செலுத்தாமல் இழுத்தடிக்கும் நபர்களிடம் கடனை திருப்பி வசூலிக்கும் பொறுப்பை ஒப்பந்தம் மூலமாக ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான அறிவிப்பும், கடிதம் மூலம் முன் கூட்டியே வங்கியில் இருந்து கடன் பெற்ற நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகின்றது.
அதன் படி, கடன் பெற்ற நபர்களை தங்கள் காரசாரமான வாய்க்கொழுப்பு வார்த்தைகளை பயன்படுத்தி வங்கிக்கே வரவழைத்து அவர்களிடம் இருந்து கடன்களை வசூலிப்பது ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களின் டெக்னிக்காக உள்ளது.
அந்த வகையில் விவசாயி ரகோத்தமனை செல்போனில் தொடர்பு கொண்ட ரிலையன்ஸ் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் , இந்தியன் வங்கியில் பெற்ற 30 ஆயிரம் ரூபாய் கடனை ஏன் திருப்பி செலுத்தவில்லை என்று கேட்டுள்ளார்.
அதற்கு ரகோத்தமனோ, தன்னை விவரம் தெரியாதவர் போல் காட்டிக் கொண்டு, நான் கடன் பெற்றது இந்தியன் வங்கியில், நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று எதிர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அந்த பெண் கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது என்றும், முன் கூட்டியே கடிதம் வந்திருக்குமே என்றும் தெரிவிக்க, நான் உன்னிடம் கடன் வாங்கவில்லை உன் கிட்ட பேச முடியாது போனை வைம்மா என்று வம்பிழுக்கும் வகையில் ரகோத்தமன் பேசியதாக கூறப்படுகின்றது
இதையடுத்து ஆவேசமான வாய்க்கொழுப்பு பெண் ஊழியர், வழக்கமான தனது பாணியிலான எதேச்சதிகார போக்கில் விவசாயி ரமோத்தமனை வார்த்தைகளால் விளாசத் தொடங்கினார்.
ஆத்திரம் அடைந்த விவசாயியோ வங்கி முன்பு வந்து படுத்து போராட்டம் பன்னுவேன், கலெக்டரிடம் புகார் அளிப்பேன் என்று பதிலுக்கு ஆவேசம் காட்ட அந்தப்பெண் அதனை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை
இதையடுத்து விவசாயி ரகோத்தமன் , நாங்க கவர்மெண்டுகிட்ட தான் கடன் வாங்கி இருக்கோம் , என்றும் கடன் வாங்கிட்டு நாட்டவுட்டு ஓடிபோனவங்கள எண்ண பன்னீங்க ? என்று கேள்வி எழுப்ப அவன் செத்தா நீங்களும் செந்துரூவீங்களா ? என்று திருப்பிக் கேட்டதோடு செத்தாலும் கடனை கட்டிவிட்டு செத்துப்போங்க என்று ரகோத்தமனை பார்த்து கூறியுள்ளார் அந்த அடாவடி பெண்..
சாமானியனை கூட ஆத்திரப்பட வைக்கும் வகையில் அந்தப் பெண் பேசிய இந்த ஆடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போல கடந்த 2016 ஆம் ஆண்டு கல்வி கடனை வசூலிப்பதற்காக ரிலையன்ஸ் பெண் ஊழியர் மிரட்டலால் அவமானம் தாங்காமல் லெனின் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதன் பின்னரும் ரிலையன்ஸ் ஊழியர்கள் தங்கள் கரடு முரடான கடன் வசூலிக்கும் பாலிசியை மாற்றிக் கொள்ளவில்லை என்பது இந்த ஆடியோவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றோர் திருப்பி செலுத்தாமல் ஆண்டுக் கணக்கில் இழுத்தடித்தால் அது அரசுக்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தாவது வாங்கிய கடனை திருப்பிச்செலுத்தினால் இது போன்ற வீண் வாதங்களை தவிர்க்கலாம் என்கின்றனர் வங்கித்துறையினர்.
Comments