வேகமாக பரவும் கொரோனா.. தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்?
தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை மூடவும், நாளை முதல் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
நோய் பரவும் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் போக, மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மற்ற மாநிலங்களை போல் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும், வழிபாட்டு தலங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கையாள ஏதுவாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதோடு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை முழுமையாக மூடவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டம் கூடுவதை தவிர்க்க கடைகளுக்கு நாளை முதல் நேரக்கட்டுப்பாடு விதிக்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வரக்கூடும் எனவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகக் கூடும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை ரத்து செய்து ஆன்லைன் வகுப்பு முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும், பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டிக்கு பார்வையாளர்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்று பாதித்தோருக்கு தடையின்றி சிகிச்சை அளிக்க, மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தேவையான மருந்துகளை இருப்பு வைக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
Comments