பக்ரைனில் 15 வருஷம் தவித்த பெண்ணை காப்பாற்றிய தமிழ் மன்றம்..! கண்பார்வை குறைபாட்டோடு திரும்பினார்

0 3410

கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், குடும்பத்தினரை பிரிந்து 15 ஆண்டுகளாக பக்ரைனில் தங்கி வேலைபார்த்து வந்த 45 வயது பெண், சொந்த ஊர் திரும்ப இயலாமலும், கண்பார்வை குறைபாட்டாலும்  தவித்த நிலையில் அங்குள்ள தமிழ் மன்றத்தினர் மீட்டு இந்தியா அனுப்பி வைத்தனர். சுற்றுலாவிசாவில் வேலைக்கு சென்றதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

குடும்பத்தினரிடம் கோபித்துக் கொண்டு மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று சிக்கிக் கொண்டு, வாழ்நாள் எல்லாம் அந்த ஊரிலே கிடைக்கின்ற வேலையை செய்து விட்டு வாழ்க்கையை ஓட்டும் சிலரை பார்த்திருபோம். அதே போல கணவன் மற்றும் பெற்ற பிள்ளைகளுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தஞ்சையை சேர்ந்த உமா என்ற 30 வயது பெண்மணி எடுத்த அவசர முடிவு அவரை 15 வருடம் பக்ரைனில் பெரும் தவிப்புக்குள்ளாக்கியது.

கடந்த 2006 ஆம் ஆண்டு குடும்பத்தினரை பிரிந்து வெளி நாட்டிற்கு வேலைக்கு செல்ல முடிவு செய்த உமா, தன்னிடம் இருந்த நகைகளை விற்று பாஸ்போர்ட் மற்றும் விசாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட ஒரு ஏஜெண்ட் வீட்டு வேலைக்கு என்று விசாவையும், விமான டிக்கெட்டையும் கையில் கொடுத்து பக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளான். அங்கு சென்று இறங்கிய பின்னர் தான் உமாவுக்கு தெரியவந்துள்ளது தன் கையில் இருப்பது சுற்றுலாவிசா என்று, முறையான விசா இல்லாததால் அங்கு உரிய வேலை கிடைக்காமலும், அங்கிருந்து மீண்டும் ஊருக்கு திரும்ப இயலாமலும் தவித்த உமா யாரை தெடர்பு கொள்வது ? என்பது தெரியாமல் பாசை தெரியாத பக்ரைன் தேசத்தில் அங்கு கிடைக்கின்ற வேலைகளை செய்து வாழக்கையை கழிக்க தொடங்கி இருக்கிறார்.

பெரும்பாலும் ஏராளமான வீடுகளில் அடிமை போல தங்கி இருந்து வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். சில நல்ல உள்ளம் கொண்டோர் அவர் பார்க்கும் வேலைக்கு சாப்பாடு போட்டு சம்பளமும் கொடுத்துள்ளனர். இப்படியே 15 ஆண்டுகள் கடந்த நிலையில் கண்பார்வை மங்க தொடங்கியதும் வீட்டு வேலைகளை செய்ய இயலாமல் கஷ்டப்பட்டுள்ளார். இதனால் இவரை யாரும் வேலைக்கு அழைக்காததால், என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் வீதிகளில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த பஹ்ரைன் அன்னை தமிழ் மன்றத்தை சேர்ந்த செந்தில் என்பவர் தனது அமைப்பினருடன் உமாவை மீட்டுள்ளார். தொடர்ந்து சுற்றுலா விசாவில் வந்து தவிக்கின்ற உமா குறித்து விவரத்தை இந்திய தூதரகத்தை அணுகி எடுத்துக்கூறி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் சட்டமைப்பிற்கான தைவர் சுதீர் உதவியுடன் அந்தப்பெண்ணிற்கு பாஸ்போர்ட் மற்றும் இந்தியா திரும்ப தேவையான உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது. அத்தோடில்லாமல் உமாவின் கண்பார்வைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, இந்தியாவில் அவருக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்து கொடுத்து உதவியுள்ளனர்

இதனை தொடர்ந்து கடந்த 31 ந்தேதி இரவு உமாவை விமானம் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தஞ்சை செல்லவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. மனக்கசப்பால் குடும்பத்தினரை விட்டு பிரிந்தாலும் தனக்கு கிடைத்த வருமானத்தின் பெரும்பகுதியை கணவர் மற்றும் குழந்தைகளுக்குத்தான் அனுப்பி வைத்துள்ளார் உமா. சொந்த ஊருக்கு செல்வோமா என்று பாசைதெரியாத பக்ரைபில் பரிதவித்துக்கிடந்த உமா , அன்னை தமிழ் மன்றத்தினரின் கருணையினால் புத்தாண்டில் தனது குடும்பத்தினருக்கு மீண்டும் கிடைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments