இளைஞர் உடலை துளைத்த 6 குண்டுகள்.. முன்விரோதத்தால் நிகழ்ந்த கொடூரக் கொலை..!
திண்டுக்கலில் மீன்பிடி காண்ட்ராக்டர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்தது தெரியவந்துள்ள நிலையில், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ்குமார் என்ற 27வயது இளைஞர், குளம் ஏலம் எடுத்து மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர்களுடன் சேர்ந்து செட்டிகுளம் குளத்தில் ராகேஷ்குமார் காவல் காத்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டதோடு, அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
ராகேஷ்குமார் உடலில் ஆறு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்த நிலையில், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். சம்பவ இடத்தில் தென்மண்டல ஐ.ஜி. அன்பு, டி.ஐ.ஜி. விஜயகுமாரி, எஸ்.பி.சீனிவாசன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ராகேஷ்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவனுக்கும் இடையே குளம் ஏலம் எடுப்பதில் முன்விரோதம் இருந்துள்ளது. செட்டிகுளம் குளத்தை பல ஆண்டுகளாக பிராகாஷ் என்பவனே குத்தகைக்கு எடுத்து வந்த நிலையில், தற்போது ராகேஷ்குமார் குத்தகைக்கு எடுத்து மீன்பிடித்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே ஏற்கனவே 3 மாதத்திற்கு முன் வாக்குவாதம் உருவாகி, கைகலப்பு நிகழ்ந்துள்ளது.
இடையிடையே ஆட்களை வைத்து மிரட்டி அந்த குளத்தை அபகரிக்க பிரகாஷ் முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், தனது நண்பர்கள் உதவியுடன் ராகேஷ்குமாரை பிரகாஷ் தீர்த்துக் கட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, இரண்டு அரிவாள் ஆகியவற்றை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐ.ஜி. அன்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றச்சம்பவத்தை கட்டுப்படுத்த அதிகளவில் குண்டாஸ் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
இதற்கிடையே, கொலையாளிகளை கைது செய்ய முயன்ற போது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றதாகவும் அப்போது அவர்களில் 4 பேருக்கு கை, கால்களில் எலும்புமுறிவு ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து நான்கு பேரையும் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து மாவுக்கட்டு போட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments