"அதிமுக ஆட்சியில் 3 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போயிருக்கிறது” - அமைச்சர் செந்தில் பாலாஜி
அதிமுக ஆட்சியில் 3 லட்சம் டன் நிலக்கரி காணமல் போய் உள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகளில், 4 மாதங்களில் 7,833 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 3 மாதத்தில் 20 ஆயிரத்து 122 விவசாயிகளூக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு முழுவதுமாக வழங்கப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.
மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி சேர்க்கப்படவில்லை என்றும், கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறையே பின்பற்றப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதர கட்டணங்களுக்கு ஏற்கனவே ஜி.எஸ்.டி நடைமுறையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், டாஸ்மாக் பார்கள் குறித்து பேசும்போது, 2019-ல் நடைபெற்ற டெண்டரில், 5,387 கடைகளுக்கும் 6,400 விண்ணப்பம் தான் பெறப்பட்டது என்றும், ஆனால் தற்போது 11,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
Comments