திருவான்மியூர் ரயில் நிலையம்.! துப்பாக்கி முனையில் கொள்ளை.!
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்திற்குள் அதிகாலையில் புகுந்த மர்ம கும்பல், டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த ஊழியரை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் டிக்காராம் என்ற ஊழியர் மட்டும் இரவு பணியில் இருந்த நிலையில், அதிகாலை நான்கரை மணியளவில் அங்கு 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வந்துள்ளது.
ஒருவன் பயணி போல் டிக்கெட் கவுண்ட்டருக்கு முன்பக்கம் ஜன்னல் கம்பி வழியாக ஊழியர் டிக்காராமிடம் பேச்சுக் கொடுத்து கவனத்தை திசைதிருப்ப, மற்ற இருவரும், ஊழியர்கள் பயன்படுத்தும் வழியாக கவுண்டருக்குள் உள்ளே சென்று பின்பக்கமாக டிக்காராமின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், டிக்காராம் வாயில் துணியை வைத்து அடைத்து, கை, கால்களை கட்டிப்போட்டு, லாக்கரில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
பயணிகள் நடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பணியில் இல்லாததை அறிந்து திட்டமிட்டு கொள்ளையர்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என கருதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காலை நேரத்தில் பயணிகள் டிக்கெட் எடுக்க வந்த போது, கை, கால்கள் கட்டிப்போட்டு கிடந்த ஊழியரை கண்டு அதிர்ச்சி அடைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்பநாயை வரவழைத்து, தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
கொள்ளைச் சம்பவம் அரங்கேறிய திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் ஒரு சிசிடிவி கேமராக்கள் கூட இல்லை என்பதால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொள்ளை நடந்த நேரத்தை வைத்தும், ஊழியர் டிக்காராம் சொன்ன அடையாளங்களை வைத்தும் டைடல் பார்க் சிக்னல் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான சந்தேகிக்கும் படியான சில நபர்களின் அடையாளங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அத்தோடு, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Comments