மனைவி, மகன்களை கொலை செய்து வங்கி அதிகாரி தற்கொலை.. ஆன்லைன் ரம்மியால் நேர்ந்த விபரீதம்..!
சென்னையில் கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் மகன்களை கொடூரமாக கொலை செய்துவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர், குடும்பத்தையே கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மணிகண்டன் என்பவர் தனது மனைவி தாரா மற்றும் 10 வயது மகன் தரண், ஒரு வயது மகன் தாகன் ஆகியோருடன் வசித்து வந்தார்.கோயம்புத்தூரை சேர்ந்த மணிகண்டன் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு வங்கியின் சென்னைக் கிளையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக மணிகண்டன் சரியாக வங்கிப்பணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும், வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து வீட்டில் மது அருந்திவிட்டு ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தொடர்ந்து விளையாடி வந்ததாகவும், அதிக அளவில் பணத்தை இழந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக மணிகண்டன் தனது நண்பர்கள் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பலரிடம் தொடர்ந்து அவர் கடன் வாங்கியதை அடுத்து, அவர்கள் கடனை திருப்பி செலுத்துமாறு நெருக்கடி அளித்ததாக கூறப்படுகிறது.
கடன் சுமை மற்றும் குடும்ப சூழல் தொடர்பாக மணிகண்டனை அவரது மனைவி தாரா கண்டித்ததை அடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட தகராறு முற்றியதில் கோபத்தில் மணிகண்டன், தாராவை கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார். இதில் தாரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து, மகன் தரணை கழுத்தை நெறித்தும், தாகனை துணியால் அமுக்கியும் கொலை செய்த மணிகண்டன், வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், மணிகண்டனை அவரது நண்பர் ஒருவர் நேற்று இரவு முதல் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அவர் தொலைபேசி அழைப்பை ஏற்காத நிலையில், குடியிருப்பின் காவலாளி உள்ளிட்டோரும் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். இதனையடுத்து இன்று காலை மணிகண்டன் குடியிருக்கும் 7வது மாடிக்குச் சென்ற அவர்கள், வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்ததையும், மின்விசிறி மட்டும் சுற்றிக் கொண்டிருந்ததையும் பார்த்துள்ளனர்.
நீண்ட நேரம் வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மணிகண்டனின் மூத்த மகனான 10 வயது சிறுவன் தரண் ஹாலில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தான்.
மேலும், ஒரு வயது குழந்தை படுக்கை அறையில் சடலமாக இருந்த நிலையில், மனைவி குளியறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அருகில் கிரிக்கெட் மட்டை ரத்த கறை படிந்து இருந்த நிலையில், மணிகண்டன் சமையலறையில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
வீட்டில் நிறைய காலி மதுபாட்டில்கள் இருந்ததாகவும், மணிகண்டனின் தொலைபேசியை ஆய்வு செய்ததில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பன்னாட்டு வங்கியில் உயர்பொறுப்பில் பணியாற்றிய மணிகண்டன், பணிக்கு செல்லாமல் இருந்தது ஏன் என்பது பற்றியும், பல லட்சம் பணத்தை இழக்கும் அளவிற்கு அவர் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கினாரா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments