700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டுப் பல்கலைக்கழகம்.. அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..!

0 2865
700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டுப் பல்கலைக்கழகம்.. அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..!

உத்தரப் பிரதேசம் மீரட்டில் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேஜர் தயான்சந்த் பெயரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

உத்தரப்பிரதேசம் மீரட்டுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் அங்குள்ள அவுகார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

 விடுதலைப் போராட்டத் தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். விடுதலைப் போராட்டம் தொடர்பான அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் பார்வையிட்டனர்.

 மீரட்டில் இருந்து காரில் சர்தானா நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை வழியெங்கும் சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் வரவேற்றனர். பிரதமரும் கையசைத்து அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.

 சர்தானாவில் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விளையாட்டுக் கருவிகள், பொருட்களைப் பார்வையிட்ட பிரதமர் அவற்றின் பயன்பாடு குறித்துக் கேட்டறிந்தார். உடற்பயிற்சிக்கான கருவிகளைப் பார்வையிட்ட பிரதமர் அதில் அமர்ந்து பயிற்சி செய்து பார்த்தார்.

 புதிதாக அமைக்கப்பட உள்ள விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் மாதிரியையும் பிரதமர் பார்வையிட்டார். ஹாக்கி விளையாட்டில் புகழ்பெற்ற மேஜர் தயான்சந்த் பெயரில் சர்தானாவில் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட விளையாட்டுப் பல்கலைக்கழகங்களை நாட்டின் பல நகரங்களிலும் உருவாக்க வேண்டும் என்கிற பிரதமரின் கனவை நனவாக்கும் வகையில் தயான்சந்த் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. இதில் அனைத்து விளையாட்டுகளுக்கான களங்கள், உடற்பயிற்சி அரங்கம், தடகளம், நீச்சல்குளம், பன்னோக்கு அரங்கம், மிதிவண்டிப் பாதை ஆகியன அமைக்கப்பட உள்ளன.

துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல், வில்வித்தை, துடுப்புப் படகோட்டுதல் ஆகியவற்றுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். ஒரே நேரத்தில் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஆயிரத்து 80 வீரர் வீராங்கனைகளுக்குப் பயிற்சியளிக்கும் வசதிகள் செய்யப்பட உள்ளன.

விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, விளையாட்டுத் துறையில் உயரிய விருதுக்குத் தயான்சந்தின் பெயரைச் சூட்டியதை நினைவுகூர்ந்தார். மீரட் விளையாட்டுப் பல்கலைக்கழகமும் தயான்சந்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

700 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்தப் பல்கலைக்கழகம் உலகத்தர விளையாட்டு வசதிகளை இளைஞர்களுக்கு அளிக்கும் என்றும், ஆண்டுதோறும் ஆயிரத்து 80 பேர் இங்குப் பயின்று பட்டம் பெறுவர் என்றும் தெரிவித்தார்.

விளையாட்டுக் கருவிகள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டியுள்ளதன் தேவையை வலியுறுத்தினார். தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அறிவியல், கணிதம் உள்ளிட்ட மற்ற படிப்புகளைப் போல விளையாட்டும் சிறப்பான பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments