கொரோனா 3ஆவது அலை தொடக்கம்.! உஷார்.! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியதாகக் கருதிக்கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 86 விழுக்காட்டினரும் சென்னையில் 91 விழுக்காட்டினரும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் 15 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கான தடுப்பூசி போடும் இயக்கத்தை முதலமைச்சர் நாளை தொடக்கி வைக்கவுள்ளதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மத்திய அரசு வழிகாட்டுதல்களை அறிவித்தவுடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்தார்.
கொரோனா பரவல் கடந்த ஆண்டு மே மாதம் தொட்ட உச்சத்தை மீண்டும் எட்டுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் தெரிவித்தார். தொற்று உறுதியானவர்களுக்கு நான்காம் நாளிலும் ஐந்தாம் நாளிலும் பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என முடிவு வந்தால் அவர்கள் வீட்டுத்தனிமையில் இருக்க அனுமதிக்கப்படுவர் எனக் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தால், அறிகுறி இல்லாதவர்களை வீட்டுத்தனிமையிலேயே வைத்துச் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 74 இலட்சம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 96 லட்சம் பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளாமல் உள்ளதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, கொரோனா சிகிச்சை மையங்கள் அமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வார்டு ஒன்றிற்கு 5 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களை கண்காணிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments