தஞ்சையில் ரூ.500 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு
500 கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான பச்சை மரகதலிங்கம் சிலையை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வங்கி லாக்கரில் இருந்து மீட்டுள்ளனர்.
சோழ மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து அபூர்வ மரகத லிங்கத்தை கொண்டு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மரகதத்தால் செய்யப்பட்ட சிலைகள், சோழர் ஆட்சிக் காலத்தில் ஒருசில கோயில்களில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், திருக்குவளையில் உள்ள புகழ்பெற்ற தியாகராஜர் கோயிலில் இருந்த தொன்மையான பச்சை மரகத சிலை, கடந்த 2016-ம் ஆண்டு திருடு போனதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தருமபுரம் ஆதீனத்தின் நிர்வாகி சவுரிராஜன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தஞ்சாவூரில் வங்கி லாக்கர் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மரகத லிங்கத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
தஞ்சாவூர் அருளானந்தம் நகரை சேர்ந்த சாமியப்பன் என்பவரிடம் விலை உயர்ந்த மரகதலிங்கம் இருப்பதாகவும், அது வங்கி லாக்கரில் இருப்பதாகவும், அவரது மகன் அருண் பாஸ்கர் போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து வங்கி லாக்கரில் இருந்த மரகதலிங்கம் மீட்கப்பட்டது.
நவரத்தின வல்லுநர்களை கொண்டு சோதனை செய்து, இது சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புடைய பச்சை மரகதலிங்கம் என உறுதிப்படுத்தியதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.பொன்னி, கூடுதல் எஸ்.பி அசோக் நடராஜன் உட்பட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு, கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி பரிசு வழங்கி பாராட்டினார்.
இதனிடையே, 500 கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம் சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்துள்ள டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக கோயில்களில் காணாமல் போன அனைத்து சிலைகளையும் விரைந்து மீட்க வேண்டும், எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Comments