வியாபாரி வீட்டில் பல கோடி பணம்.. பின்னணியில் இருப்பது யார்? இரு கட்சிகள் இடையே முற்றும் வார்த்தைப்போர்.!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், சாதாரண பான்மசாலா வியாபாரியிடமிருந்து ஏறத்தாழ 200 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சில நாட்களுக்கு முன், வரித்துறை அதிகாரிகள் பான்மசாலா சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரியை அகமதாபாத் புறநகரில் தடுத்து சோதனையிட்ட போது லாரி ஓட்டுனரால் விளக்கம் கூற இயலவில்லை. லாரி யாருக்கு சொந்தம் என்று விசாரணை நடத்திய போது அது காதன்பூரைச் சேர்ந்த பான்மசாலா தொழிலதிபர் பியூஷ் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான வாகனம் என்று தெரிய வந்தது. இதையடுத்து பியூஷ் ஜெயின் வீட்டில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே, மேலும் 4 சரக்கு லாரிகளும் 200 போலி பில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சரக்கு கிடங்குகளில் கணக்கில் காட்டப்பட்ட கையிருப்புக்கும் சரக்கு லாரிகளில் அனுப்பப்பட்டவைக்கும் கணக்கு பொருந்தவில்லை. இதையடுத்து பான் மசாலாவுக்கான ரசாயன கச்சா பொருள் சப்ளை செய்த பியூஷின் உறவினர் பிரவீண் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அடுத்த இரண்டு நாட்களில் நடைபெற்ற தொடர் சோதனைகளில் கணக்கில் வராத சுமார் 200 கோடி ரூபாய் கட்டுக்கட்டாக ரொக்கப்பணம் கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணத்தை 14 இயந்திரங்களுடன் எண்ணி முடிப்பதற்கே அதிகாரிகளுக்கு 36 மணி நேரம் ஆனது.
இதைத் தொடர்ந்து கன்னோஜ் நகரில் உள்ள பியூஷின் பூட்டப்பட்டிருந்த வீட்டைத் திறந்து சோதனையிட்டதில் சினிமாவில் வருவது போல படுக்கை விரிப்புக்கு அடியில் கட்டுக்கட்டாக மேலும் 19 கோடி ரூபாய் சிக்கியது.23 கிலோ தங்கமும் 600 கிலோ சந்தனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கன்னோஜ் நகரில் மூன்று அறை கொண்ட ஒரு வீட்டில் வசித்த பியூஷின் குடும்பம் அடுத்தடுத்து வீடுகளை வாங்கிக் குவித்ததாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் தெரிவித்தனர். இரண்டு மகன்கள் துணையுடன் ஒரு மிகப்பெரிய பான் மசாலா சாம்ராஜ்யத்தையே நிறுவிய பியூஷ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையை வலுத்துள்ளது. பிரதமர் மோடி உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி உள்ளிட்ட பாஜகவின் தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியின் ஊழல் பணம் கைமாறியிருப்பதாக குற்றம் சாட்டினர். இதனால் சமாஜ்வாதிக்கும் பாஜகவுக்கும் இடையே சொற்போர் வலுத்துள்ளது.
Comments