ஒமைக்ரான் பாதிப்பு 900.ஐ கடந்துள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள்.!
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 900ஐக் கடந்துள்ள நிலையில், புத்தாண்டையொட்டி பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை கூடுதலாக்கி உள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு நாட்களில் தொற்றின் வேகம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் ஒமைக்ரான் தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போதைய தரவுகளின்படி, ஓமைக்ரான் ஒரு லேசான தொற்று என்றும் ஆக்ஸிஜன் தேவை அவ்வளவாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா, மருந்துகளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நம்மில் பெரும்பாலானோர் தடுப்பூசி காரணமாகவோ அல்லது இயற்கையான தொற்று காரணமாகவோ நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒமிக்ரானைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றும், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு இதுவரை 8 மாநிலங்கள் மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. கேரளாவில் இன்று முதல் வரும் 2ம் தேதி வரை கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அரசியல், சமூக மற்றும் மதக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து வரும் அல்லது பயணிக்கும் பயணிகள் கண்டிப்பாக சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என மேற்கு வங்க, டெல்லி மற்றும் மகாராஷ்டிர அரசுகள் தெரிவித்துள்ளன.
Comments