2 வது கணவன் சிலையை பெயர்த்த 4 வது கணவன்.. இதுவல்லவோ சக்தியை உணர்தல்..!
கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாமல் உலக நாடுகளே தவித்துவரும் நிலையில், தனது கண்களைப் பார்த்தாலே நோய்களெல்லாம் நீங்கிவிடும் என்று அளந்துவிட்ட அல்டாப் அன்னபூரணி, செங்கல்பட்டு அருகே தனது 2-வது கணவருக்கு சிலைவைத்து பூஜை நடத்திய நிலையில், அந்த சிலை 4-வது கணவரால் உடைத்துப் பெயர்க்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அருள் வந்திருப்பதாக காட்டுவதற்காக குதிரையில் சவாரி செல்வதைப் போல துள்ளிக்கொண்டிருக்கும் அல்டாப் அன்னபூரணி, புத்தாண்டு தினத்தில் ஏற்பாடு செய்திருந்த திவ்ய தரிசன நிகழ்ச்சிக்குக் காவல்துறையினர் தடை வித்துள்ள நிலையில், தனது முகவரியை மறைத்து கண்ணாமூச்சி ஆடிவருகிறார்.
ஆதிபராசக்தியின் பெயரைத் தவறாக பயன்படுத்தியதாகவும், பெண் தெய்வங்களை இழிவுபடுத்தும் வகையில் ஒப்பீடு செய்து பில்டப்பை ஏற்றக் கூறியதாகவும், போலிச் சாமியார் அன்னபூரணிக்கு எதிராக இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. நெட்டிசன்களும் அன்னபூரணிக்கு அவார்டு கொடுக்காத குறையாக மீம்களால் வறுத்து எடுத்து வருகின்றனர்.
வேறொரு பெண்ணின் கணவரான அரசுவுடன் சேர்ந்துகொண்டு, கோவை தொண்டாமுத்தூர் அருகே இயற்கை ஒளி என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, மன அமைதிக்கான போதனைகளைக் கூறி வந்துள்ளார்.
மூன்றே நாட்களில் மனக்குழப்பத்தை நீக்கி, ஆன்மீகப் பயிற்சி தருவதாகக் கூறி வீடியோ வெளியிட்டு, அரசுவும் அன்னபூரணியும் சேர்ந்து பெரியளவில் மெடிடேசன் நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். அதில் பணம் குவியத் தொடங்கிய நிலையில், அரசு மர்மமான முறையில் உயிரிழந்த பின்னர், அன்னபூரணி தனது பெயரை அன்னபூரணி அரசு என்று மாற்றிவைத்துக் கொண்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் வாழும் கலையாக கற்பித்து வந்துள்ளார். இதனையும் நம்பிய சிலர், அல்டாப் அன்னபூரணியின் காலில் விழுந்து கிடந்துள்ளனர்.
தனக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்து, ஒரு கட்டத்தில் நித்தி பாணியில் தன்னையே கடவுளாக அறிவித்துக் கொண்டார் அன்னபூரணி. நித்தி தன்னை சிவன் தொடங்கி அனைத்து கடவுளின் அவதாரம் என்று கூறிவருவது போல, அன்னபூரணி தன்னை ஆதிபராசக்தி உள்ளிட்ட இந்து தெய்வங்களின் அவதாரம் எனக்கூறி பார்வையிலேயே அருள்பாலித்து வருவதாக அளந்துவிட்டு வருகின்றார்.
இதற்கிடையே, மெடிடேசன் கூட்டத்தில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, மதுராந்தகம் அடுத்த பவுஞ்சூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாதங்குப்பம் கிராமத்தில், மகேஷ் என்பவரிடமிருந்து 2019 ஆம் ஆண்டு தனியாருக்குச் சொந்தமான பண்ணை வீட்டுமனைப் பிரிவில் சுமார் 50 சென்ட் நிலம் வாங்கி உள்ளார்.
அதில் முள்வேலி அமைத்து, 12 அடிக்கு 12 அடியில் சிறிய கட்டிடம் ஒன்றைக் கட்டி, அதில் மர்மமாக உயிரிழந்த இரண்டாவது கணவர் அரசுவின் உருவச் சிலையை அமைத்து வழிபட்டு வந்துள்ளார்.
முதல் கணவரைத் தூக்கி எறிந்ததுடன், 2-வது கணவர் அரசுவுடன் கலந்து சக்தி நிலையை அடைந்ததாகக் கூறிவரும் அல்டாப் அன்னபூரணி, 2 வது கணவர் இறந்து விட்டதாக கூறி 3 வதாக ஸ்டீபன்ராஜ் என்பவருடன் சக்தி உருவாக்க பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது 4-வதாக தன்னிடம் மேலாளராக உள்ள ரோகித் என்பவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு, 10 க்கும் மேற்பட்டோருடன் பழஞ்சூரில் உள்ள 2 வது கணவரின் நினைவிடத்திற்கு வந்த ரோஹித், அங்கிருந்த அரசுவின் மார்பளவுச் சிலையை அகற்றி மினி லோடு வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார்
அப்பகுதியில் விசாரித்தபோது, அன்னபூரணி, தான் வாங்கி வைத்த நிலத்தைப் பார்ப்பதற்கும், அவருடைய கணவரின் உருவச்சிலைக்கு பூஜை செய்வதற்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வந்ததாகத் தெரிவித்தனர்.
தற்போது 4-வது கணவரின் பாதுகாப்பில், சென்னையில் காரிலேயே வலம் வரும் அன்னபூரணியைப் பிடித்து விசாரித்தால், நோய்களைத் தீர்ப்பதாகவும் கடவுளின் அவதாரம் என்று கூறியும் அவர் செய்த மோசடி அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments