பிரதமர் மோடியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 12 கோடி ரூபாய் மதிப்பில் அதி நவீன கார்

0 16604

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன கார் வாங்கப்பட்டுள்ளது. அந்த காரின் சிறப்புகளைத் தற்போது காண்போம்.

குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ காரைப் பயன்படுத்தி வந்தார்.

2014ல் பிரதமராகப் பொறுப்பேற்றதும், உச்சபட்ச பாதுகாப்பு காரணமாக, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி கார் தெரிவு செய்யப்பட்டது.

அதன்பின்னர், 2019ல் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் சென்டினல், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ஆகிய கார்கள் பிரதமரின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டது.

வழக்கமாக பிரதமருக்கு எந்த வகையான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை, அவரது பாதுகாப்பு அதிகாரிகள்தான் முடிவு செய்கின்றனர். இந்த நிலையில்தான் அதிக பாதுகாப்பு கொண்ட காரைப் பயன்படுத்தும் படி பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரைக் கேட்டுக் கொண்டனர். அதன்படி, Mercedes-Maybach S 650 Guard கார் தற்போது பிரதமரின் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பின்போது, இந்தக் காரில் தான் பிரதமர் ஹைதராபாத் இல்லத்திற்கு வந்திருந்தார்.

Mercedes-Maybach S 650 Guard காரின் பாதுகாப்பு அம்சங்கள் சிலவற்றைப் பார்ப்போம். இந்தக் கார், ஏகே 47 ரக துப்பாக்கித் தோட்டாக்கள்கூட துளைக்காத அளவிற்கு பாதுகாப்பு உறுதி கொண்டதாகும்.

2 மீட்டர் தூரத்தில் 15 கிலோ அளவிற்கு வெடி மருந்து வெடித்தாலும் உள்ளே இருப்பவர்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படாத வண்ணம் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் கண்ணாடிகள் அனைத்தும் உள்புறமாக பாலி கார்பனேட் பூச்சு பூசப்பட்டுள்ளன. விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டாலும் காரில் இருப்பவர்களுக்கு தனியாக காற்று விநியோகம் கிடைக்கும்.

அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த காரின் டயர்கள் சேதமடைந்தாலோ பஞ்சர் ஆனாலோ காற்று இறங்காத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பயணிப்போரின் வசதிக்காகவும், நீண்டதூர பயணத்திற்காகவும் இருக்கைகளிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில்தான் இதேபோன்ற கார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம் செய்ய வாங்கப்பட்ட நிலையில், தற்போது பிரதமருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காரின் விலை 12 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments