நீட் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்தக் கோரி டெல்லியில் பயிற்சி டாக்டர்கள் நடத்திய போராட்டம்... 7 போலீசார் காயம்

0 1912

டெல்லியில் முதுநிலை மருத்துவப் படிப்பு நீட் கவுன்சிலிங்கை விரைந்து நடத்தக்கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மருத்துவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

முதுநிலை மருத்துவப் படிப்பு நீட் கவுன்சிலிங்கை விரைந்து நடத்தக்கோரி டெல்லி மருத்துவர்கள் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இருந்து உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மருத்துவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் இருந்த மருத்துவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு ராஜிந்தர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் போலீசார் தங்களைத் தாக்கியதாகவும் கூறி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்திவருகின்றனர்.

மருத்துவர்கள்தான் வன்முறையில் இறங்கியதாகவும், காவல்துறை வாகனங்களைச் சேதப்படுத்தியதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அனைத்துப் பணிகளையும் புறக்கணிப்பதாக ஃபோர்டா மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இதனால் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக வருவோர் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் அனைத்து இந்திய மருத்துவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், டெல்லி காவல்துறையினரைக் கண்டித்து நாளை நாடு தழுவிய அளவில் காலை 8 மணி முதல் அனைத்து சுகாதாரப் பணிகளில் இருந்தும் விலகப் போவதாக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments