வேலூர் நில அதிர்வு.. வருகிறது ஆய்வு குழு

0 7371

வேலூரில் தொடரும் நில அதிர்வுகள் தொடர்பாக ஆய்வு செய்ய, ஓரிரு நாட்களில் டெல்லியில் இருந்து சிறப்பு குழு வரவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது. வேலூர் அருகே, கடந்த மாதம் 29-ம் தேதி மற்றும் டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

இதையடுத்து அச்சம் காரணமாக குடியாத்தம், பேரணாம்பட்டு, தரைகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து, வேலூர் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பேரிடர் மேலாண்மை பேராசிரியர் கணபதி உள்ளிட்ட குழுவினர் பேரணாம்பட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரைக்காடு பகுதியில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு அப்பகுதி பொதுமக்களிடம் நில அதிர்வு குறித்து அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தொடர் நிலஅதிர்வுகளால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், பலவீனமாக உள்ள 40 வீடுகளில் லேசான விரிசல் காணப்படுவதாகவும், அவற்றில் வசித்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், வேலூர் மாவட்டத்தில் நில அதிர்வுகள் தொடர்வது குறித்து ஆராய, டெல்லியில் இருந்து சிறப்பு குழு வரவுள்ளதாகவும் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments