எப்படி இருக்கும்.. ஒமைக்ரான் பாதிப்பு?
ஒமைக்ரான் வைரஸ், கொரோனாவின் முந்தைய உருமாற்றமான டெல்டா வைரசைப் போல கொடியதாக இருக்க வாய்ப்பில்லை என முதற்கட்ட ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் தொற்று குறித்து பல்வேறு நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. தென்னாப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற முதற்கட்ட ஆய்வில், டெல்டாவை விட ஒமைக்ரான் குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இந்த வைரஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கலாம் எனத் தெரிகிறது.
டெல்டாவை விட உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படும் நோயின் தீவிரம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ஒமைக்ரான் வைரசின் உயிரியல் பண்புகளைப் பார்க்கும் போது, டெல்டாவைப் போன்று இது கொடியதாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளதாக, மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்..
முந்தைய தொற்றுகள் மற்றும் தடுப்பூசிகளால் மக்களிடம் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருக்கலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
முந்தைய நோய்த்தொற்றிலிருந்து உருவான எதிர்ப்பு சக்திலிருந்து ஒமைக்ரான் தப்பிப்பதாகக் காணப்பட்டாலும், தீவிர நோயைத் தடுக்கும் ஆற்றல்மிகுந்த நோய் எதிர்ப்பு கூறுகளிலிருந்து, அதனால் தப்பிக்க முடியாது என்றும் மருத்துவ விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்திருப்பதாக, சொல்லப்படுகிறது.
பிற உருமாற்ற தொற்றுகளுடன் ஒப்பிடும்போது, ஒமைக்ரான் தொற்றால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 70 சதவிகிதம் குறையலாம் எனத் தென்னாப்பிரிக்க ஆய்வு முடிவிலும் மூன்றில் இரண்டு பங்கு குறையலாம் என ஸ்காட்லாந்து ஆய்வும் கூறுகிறது. ஒமைக்ரான் தொற்றால், ஒரு நாளுக்கு மேல் மருத்துவமனையில் இருப்பதற்கான வாய்ப்பு 45 சதவிகிதம் குறைவாக இருக்கலாம் என இங்கிலாந்தில் நடைபெற்ற மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் அனைத்தும் முதற்கட்டத் தகவல்களே என எச்சரிக்கும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், விரைவில் பாதிக்கப்படக்கூடிய வகையினர் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒமைக்ரான் தொற்று பாதிப்பை குறைந்த நாட்களிலேயே கண்டறிய முடிவதாக கூறும் மருத்துவ வல்லுநர்கள், பாதிக்கப்பட்ட நபருக்கு மூன்று நாட்களுக்குள்ளேயே அறிகுறிகள் தோன்றலாம் என்றும் தெரிவிக்கின்றனர். விரைவாக செல்களை ஆக்கிரமிக்கும் வகையில் ஒமைக்ரான் குறிப்பிட்ட உருமாற்றத்தைக் கொண்டிருக்கலாம் என்றும், மருத்துவ உலகம் கருதுகிறது.
ஒமைக்ரானின் அறிகுறிகள் என்று பார்க்கும் போது, முந்தைய கொரோனா மற்றும் டெல்டா தொற்றுக்கு ஏற்பட்ட அதே அறிகுறிகளே ஏற்படுவதாக, மருத்துவ உலகம் கூறுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு ஒமைக்ரானின் அறிகுறிகள் தலைவலி, சைனஸ் பிரச்சனைகளும், தடுப்பூசி போடாதவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம், இருமல் மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக, மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஒமைக்ரானில் இருந்து காத்துக்கொள்ள சிறந்தவழி தடுப்பூசியே என்று கூறும் வல்லுநர்கள், இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது சிறந்த பலனளிக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
Comments