பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரை

0 2627

எத்தகைய உயரிய நிலையை அடைந்தாலும் வந்த பாதையை மறக்கக் கூடாது என்பதற்கும், கனவுகளை நனவாக்க வயது ஒரு தடையில்லை என்பதற்கும் மனத்தின் குரல் வானொலி உரையில் சான்றுகளை குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

மனத்தின் குரல் என்னும் பெயரில் பிரதமர் மோடி மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்றைய உரையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நம் கதவுகளைத் தட்டியுள்ளது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் என்றும், உலகளாவிய பெருந்தொற்றைத் தோற்கடிக்கக் குடிமக்களின் முயற்சி முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

குன்னூரில் நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததை நினைவுகூர்ந்தார். தீக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கேப்டன் வருண் சிங் உயிர்பிழைப்பார் என எண்ணிய நிலையில் அவரும் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சவுரிய சக்கரா விருது பெற்ற வருண் சிங், பள்ளி முதல்வருக்கு எழுதிய கடிதத்தைச் சமூக வலைத்தளங்களில் தான் கண்டதாகவும், அதைப் படித்தபோது வெற்றியின் உச்சியைத் தொட்டபோதும் அவர் தனது வேர்களை மறக்கவில்லை என்பதை அறிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.

 

ஆண்டுதோறும் தேர்வு பற்றிய விவாதத்தை மாணவர்களுடன் நடத்தி வருவதைக் குறிப்பிட்ட அவர், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இணையவழிப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

லக்னோ ரெசிடென்சி பகுதியில் டிரோன் கண்காட்சி நடத்தியதையும், முதல் இந்திய விடுதலைப் போரின் சான்றாக ரெசிடென்சியின் சுவர்கள் உள்ளதையும் நினைவுகூர்ந்தார்.

விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு கூறுகளை டிரோன் காட்சி மீண்டும் நினைவூட்டியதாகவும் தெரிவித்தார். கனவுகளை நனவாக்க வயது ஒரு தடையில்லை என்பதற்குத் தெலங்கானாவைச் சேர்ந்த 84 வயதான குரெல்லா விட்டலாச்சார்யா சான்றாக உள்ளதாகத் தெரிவித்தார்.

சிறுவயது முதலே பெரிய நூலகம் திறக்க வேண்டும் என அவர் கொண்டிருந்த ஆசையால் கல்லூரி விரிவுரையாளர் ஆனதுடன், தான் சேர்த்த புத்தகங்களைக் கொண்டு நூலகத்தைத் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments