தரமற்ற உணவை விற்கும் அறமற்ற மனிதர்கள்.. கோவில் வளாகத்தில் அரங்கேறும் கொடுமை.!

0 10082

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் சிலர் கெட்டுப்போன உணவுப் பொருட்களை விற்பது உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வில் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரிகார உணவு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர், தாம் விற்கும் உணவை தாமே உண்ண மறுத்து அடம் பிடித்த சம்பவமும் அரங்கேறியது. 

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் புகழ்பெற்ற பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. சனிக்கிழமைகளில் இக்கோவிலில் குவியும் ஏராளமான பக்தர்கள் தங்களது தோஷம் நீங்க பரிகாரம் செய்து செல்வார்கள்.

பரிகாரம் செய்ய வேண்டுவோர் இங்குள்ள நளன் குளத்தில் நீராடி விட்டு, கோவிலுக்கு வரும் சக பக்தர்கள் மற்றும் யாசகர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு இராசிக்கும் ஒவ்வொரு வகையான உணவை வாங்கி தானம் வழங்குவார்கள். பொதுவாக பரிகார உணவு வழங்க வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வருவது மரபாக இருந்து வந்தது.

இன்றைய அவசர யுகத்தில் எல்லாமும் ரெடிமேடாகப் போய்விட்ட நிலையில், பரிகார உணவுகளும் சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டி விற்கப்படுகின்றன. இதற்காக நளன் குளத்தைச் சுற்றி ஏராளமான சிறு சிறு கடைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில கடைகளில் கெட்டுப்போன உணவுகள் விற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார்கள் சென்றன. அதன் பேரில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பெரும்பாலான உணவு விற்பனைக் கடைகளில் கெட்டுப்போன உணவுகள் விற்பது உறுதியானது. அந்த உணவுகளை விற்பனை செய்தவர்களிடம் அவர்கள் விற்கும் உணவை அவர்களையே சாப்பிடும்படி உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கேட்டபோது அவர்கள் சாப்பிட மறுத்தனர். அவர்களிடமிருந்து அந்த உணவுப் பொட்டலங்களை அவர் பறிமுதல் செய்தார்;.

தொடர்ந்து அங்கு அமர்ந்திருந்த யாசகர்களிடம் சென்ற ரவிச்சந்திரன், அவர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட உணவையும் வாங்கி பரிசோதித்துப் பார்த்தார். கெட்டுப்போன உணவுகளை விற்ற அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், இனி வாரம் தோறும் ஆய்வு நடத்தப்படும் என்றும் கூறினார்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். பசியோடு இருக்கும் ஒரு மனிதனுக்கு கொடுக்கும் உணவு இறைவனுக்கு நேரடியாகக் கொடுக்கப்படும் காணிக்கை என்ற சொல்லாடலும் உண்டு. அப்படிப்பட்ட உணவை தரமற்றதாகக் கொடுக்கும் அறமற்ற வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments