அரசுப் பள்ளியில் கெட்டுப்போன முட்டைகள் வைத்திருந்த சம்பவம் ; சத்துணவு அமைப்பாளர், சமையலர், தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
கரூர் அருகே கெட்டுப்போன முட்டைகளை வைத்திருந்த அரசுப் பள்ளி சத்துணவு அமைப்பாளர், சமையலர் அதை கண்காணிக்கத் தவறிய தலைமையாசிரியர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் கெட்டுப்போய் இருப்பதாக மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் புகாரளித்ததைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முட்டைகள் உள்ளிட்ட மளிகைப் பொருள்களின் தரத்தை அவர் ஆய்வு செய்தார்.
முட்டைகள் நன்றாக இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய, தண்ணீரில் போட்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், பள்ளியில் தற்போதுள்ள மளிகைப்பொருள்கள் நல்ல நிலையில் இருப்பதாகக் கூறினார். மேலும், கடந்த வாரம் கெட்டுப்போன முட்டைகளை அழிக்காமல் வைத்திருந்த சத்துணவு அமைப்பாளர், சமையலர், கண்காணிக்கத் தவறிய பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
Comments