தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்
அரசு நிறுவனமான ஆவினில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல்துறை இன்று, 9ஆவது நாளாகத் தேடி வருகிறது.
இதற்காக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு சார்பில், எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 17ஆம்தேதி முதல் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தனிப்படையினர், கேரளாவிலும், பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் முகாமிட்டுள்ளனர்.
வெவ்வேறு கார்களில் மாறிமாறி ஏறிச் சென்று ராஜேந்திர பாலாஜி தப்பித்து வருவதாக விருதுநகர் மாவட்ட எஸ்பி கூறியுள்ளார். ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விடாமல் இருப்பதற்காக, அவருக்கு எதிராக கடந்த 23ஆம் தேதி லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது பணப்புழக்கத்தை முடக்கி, அவரது நகர்வுகளைத் தடுக்கும் நோக்கில் ராஜேந்திர பாலாஜியின் ஆறு வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
Comments