இல்லாத இரிடியத்துக்கு ரூ.23 லட்சம்.. உடன் பிறப்பையே ஏமாற்றிய அண்ணன்..!
சிவகங்கையில் இரிடியம் வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி சொந்த தம்பியிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய அண்ணன், அவரது 23 லட்சம் ரூபாய் பணத்தை கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறி செய்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமங்கலத்தைச் சேர்ந்த குருசாமியும், ஆறுமுகமும் அண்ணன், தம்பிகளாவர். இரிடியம் வாங்கி விற்பனை செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ஆறுமுகத்தின் ஆசையை தூண்டிய குருசாமி, அதற்கான பணத்தை ஏற்பாடு செய்யுமாறு கூறியிருக்கிறார்.
ஆறுமுகமும் அண்ணனை நம்பி, வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து 23லட்சம் பணத்தை வாங்கி வந்த நிலையில், இரிடியம் வாங்கலாம் எனக் கூறி சிவகங்கைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் குருசாமி. காரில் செல்லும் போது, பாதி வழியில் கரும்பாவூர் விலக்கு அருகே இறக்கிவிட்டுவிட்டு, அங்கேயே நிற்குமாறு கூறி தம்பியை நிற்க வைத்து விட்டு, சாப்பாடு வாங்கி வருவதாக கூறி குருசாமி சென்ற நிலையில், அந்த நேரம் பார்த்து ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி ஆறுமுகத்தை தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளது.
திரும்பி வந்து நல்லவன் போல் நடித்த குருசாமி நிலம் வாங்க வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி விட்டதாக தம்பியை கையோடு காவல் நிலையம் அழைத்துச் சென்று புகாரளித்திருக்கிறார்.
விசாரணையில் தம்பியை திட்டமிட்டு அழைத்துச் சென்று கூட்டாளிகளை வைத்து அண்ணன் பணத்தை வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, குருசாமி உட்பட அவனது கூட்டாளிகள் 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments