பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பண்டிகை காலங்களில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்களை காட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உட்பட தமிழகத்தில் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தொற்று பரவலை தடுப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, உலக சுகாதார அமைப்பின் முதுநிலை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனை அடுத்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவக் குழு ஆலோசனையின்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை, உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடுவதால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் எனவே, வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு சமூக இடைவெளியையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தவறாது கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Comments