வரி ஏய்த்த வணிகர் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை.. 150 கோடி ரூபாய் பறிமுதல்..!
உத்தரப்பிரதேசம் கான்பூரில் வரி ஏய்த்த பான்மசாலா வணிகரின் வீட்டில் சோதனை நடத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள், இதுவரை இல்லா வகையில் பண்டல் பண்டலாகக் கட்டுக் கட்டுகளாக 150 கோடி ரூபாய்ப் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் என்கிற பான் மசாலா வணிகர் வரி ஏய்த்ததாக வந்த குற்றச்சாட்டையடுத்து அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் வியாழனன்று ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மும்பையிலும் குஜராத்திலும் உள்ள அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. இரண்டாம் நாளாக நீடித்த சோதனையில், மின்னணு முறையில் வழிச்சீட்டுப் பதிவு செய்யாமல் போலியாக பில்கள் தயாரித்தும், சரக்கின் மதிப்பைக் குறைத்துக் காட்டியும் கோடிக்கணக்கில் வரி ஏய்த்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விற்பனை செய்த பான்மசாலாவுக்கு 28 விழுக்காடு வரியும், இழப்பீட்டுக்கான மேல் வரியும் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வரி ஏய்ப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்குப் பங்குள்ளதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் தலைவர் விவேக் ஜோரி தெரிவித்துள்ளார்.
கான்பூரில் உள்ள பியூஷ் ஜெயினின் வீட்டில் அலமாரிகள், பீரோக்கள் எனப் பல இடங்களில் பண்டல் பண்டலாகப் பணத்தாள்களைக் கட்டி அடுக்கியிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பணக் கட்டுகளை வீட்டில் ஓரிடத்தில் குவித்து வைத்து ஆள் வைத்து எண்ண முடியாமல் பத்துக்கு மேற்பட்ட பணம் எண்ணும் இயந்திரங்களை வரவழைத்து எண்ணினர்.
எண்ணி முடித்த வரையில் 150 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மேலும் எண்ணிக்கை நடைபெற்று வருவதாகவும் இது தங்கள் வாரியத்தால் இது வரை கைப்பற்றப்பட்டதிலேயே மிக அதிகத் தொகையாகும் என்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் விவேக் ஜோரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments