பாலத்தில் விரிசல் 23 ரயில்கள் ரத்து

0 5828

வேலூர் காட்பாடி அருகே பொன்னையாற்றின் ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்ட காரணத்தால் அவ்வழியாக செல்லும் 23 ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக பொன்னையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில், முகுந்தராயபுரம் - திருவலம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொன்னையாற்றின் குறுக்கே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் பில்லர் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 1,857-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த ரயில்வே பாலத்தில் 55 கண்கள் உள்ளன.

இதில் 38ஆவது கண்னின் கீழ் லேசான விரிசல் ரயில்வே ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, விரிசலை ஆய்வு செய்து சரிசெய்யும் பணியில் பொறியாளர்களும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

சாக்கு பைகளில் மணல் மற்றும் ஜல்லிகளை நிரப்பி பாலத்தின் கீழ், மணல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அடுக்கப்பட்டன. சென்னையில் இருந்து காட்பாடி செல்லும் ரயில் பாதை முடக்கப்பட்டு, காட்பாடி முதல் சென்னை இடையேயான ரயில் பாதையில் ஒரு வழித்தட மார்க்கத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ரயில்கள் ஆங்கங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக செல்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

ஜோலார்பேட்டை - சென்னை இடையிலான ஏலகிரி விரைவு ரயில், வேலூர் கண்டோன்மெண்ட் - சென்னை கடற்கரை இடையிலான ரயில், ஜோலார்பேட்டை - அரக்கோணம் இடையிலான ரயில், பெங்களூரு - சென்னை இடையிலான சாதாப்தி ரயில், ரேணிகுண்டா - மைசூரு இடையிலான விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் சாதாப்தி விரைவு ரயில், மங்களூருவுக்கு செல்லும் அதிவிரைவு ரயில் மற்றும் திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் மங்களூரு-சென்னை, ஆலப்புழா-சென்னை, ரேணிகுண்டா-மைசூரு உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவுக்கட்டணம் திரும்ப வழங்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments