ஆசிட் கேனை வெட்டிய இளைஞர் வெடித்து சிதறினார்..! ஆசிட் வெடிக்க இதுதான் காரணம்..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பல ஆண்டுகளாக திறக்கபடாமல் கிடந்த ஆசிட் கேனை, வெட்டித் திறக்க முயன்றபோது, ஆசிட் கியாஸ் வெடித்ததில், இளைஞர் உடல்சிதறிப் பலியானார். பயனற்ற பொருளால் நிகழ்ந்த உயிர்ப்பலி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த உக்கம் பெரும்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி . இவர் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ஆக்கூர் கூட்டு ரோடு சந்திப்பு பகுதியில், ஜாலி சிமெண்ட் வொர்க்ஸ் தொழில் செய்து வருகிறார். இங்கு மகாஜனம்பாக்கம் கிராம காலனியைச் சேர்ந்த சுகுமார் என்பவர் பெயின்டராக வேலை பார்த்து வந்தார்.
இவர் வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மதிய வேளையில் கடையின் ஓரமாக பல மாதங்களாக பயனற்று கிடந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலாவதியான ஆசிட் கேனைத் திறக்க முயன்றார்.
அந்த கேனில் இருந்த ஆசிட் கட்டியாகி திறக்க இயலாத நிலையில் காணப்பட்டது. இதையடுத்து சிறிய கத்தி மூலம் வெட்டி திறக்க முயன்றார். அப்போது திடீரென ஆசிட் கேன் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதில் தூக்கி வீசப்பட்ட சுகுமார் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிதைந்து கிடந்த சுகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். செய்யாறு டிஎஸ்பி செந்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.
முதல் கட்ட விசாரணையில், சுகுமார் கத்தியால் வெட்டிய பிளாஸ்டிக் கேனில் இருந்த ஆசிட் கட்டியானாலும், அதன் வீரியம் கியாஸ் போல கேனில் நிறைந்து இருந்துள்ளது. மூடியைத் திறக்க முடியாமல் போனதால் அதனை வேகமாக வெட்டியதும் அதில் இருந்த கியாஸ் வெடித்துச் சிதறியதில் சுகுமாரின் உடலும் சிதறிப்போனதாகவும், பல மாதங்களாக எதற்கும் பயனற்ற பொருளாய் கிடந்த ஆசிட் கேனை பயன்படுத்த நினைத்து வெட்டியதால் இந்த விபரீத விபத்து நிகழ்ந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments