தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடக்கம்.! பிளாஸ்டிக் பைக்கு குட்பை.!

0 5104

பிளாஸ்டிக்கை ஒழித்துக் கட்டும் வகையில், தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை  என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மஞ்சப்பை பயன்பாடு கெளரவ குறைச்சல் அல்ல என்றும், அனைவரும், துணிப்பைகளை பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும், முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். 

பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு 2019ஆம் ஆண்டு தடை விதித்தது. இந்த நிலையில், பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தவும் மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப் படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றார். மஞ்சப்பை வைத்திருந்தால் அவமானம் என்ற மனநிலைமை மாற்றப்பட வேண்டும் எனவும், சினிமாவிலும் கூட மஞ்சப்பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு வந்தால் அவர் கிராமத்தான் என்று அடையாளப்படுத்தும் மனநிலை இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார். மஞ்சப்பை என்பது அவமானம் அல்ல எனவும் அது சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம் எனவும் முதலமைச்சர் கூறினார். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க வேண்டும் என முதலமைச்ச்சர் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments